ஆண்டிப்பட்டி அருகே பரபரப்பு:விவசாயி வீட்டுக்குள் புகுந்த கரடி:மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்

ஆண்டிப்பட்டி அருகே விவசாயி வீட்டுக்குள் கரடி புகுந்தது. அந்த கரடியை, மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.

Update: 2023-02-14 18:45 GMT

வீட்டுக்குள் புகுந்த கரடி

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. விவசாயி. இவர், அதே ஊரில் மலையடிவாரத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று காலை 7 மணியளவில் மாரிமுத்து மற்றும் அவரது குடும்பத்தினர் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். இவர்களது வீடு திறந்து கிடந்தது.

அப்போது மாரிமுத்து வளர்க்கும் நாய் வீட்டின் அருகே நின்று குரைத்து கொண்டிருந்தது. இதைக்கண்ட மாரிமுத்து, வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டிற்குள் 3 அடி உயரமுள்ள கரடி உலாவி கொண்டிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக வீட்டின் கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் அலறியடித்து ஓடினார்.

கூண்டு வைத்து பிடிக்க முயற்சி

இதுகுறித்து அவர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் ஆண்டிப்பட்டி வனச்சரகர் அருள்குமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் தீயணைப்பு படையினரும் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் வனத்துறையினருடன் சேர்ந்து கரடியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது வீட்டின் முன்பு கூண்டு வைத்து அதில் பழங்கள் மற்றும் தேன் வைத்து கரடியை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் கரடி ஆக்ரோஷமாக இருந்ததால், அதனை கூண்டில் பிடிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

மயக்க ஊசி

இதற்கிடையே தேனி மாவட்ட உதவி வனப்பாதுகாவலர் ஷர்மி சம்பவ இடத்திற்கு வந்தார். இதையடுத்து அவர் வீட்டில் அடைபட்டுள்ள கரடியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்தார்.

இதற்காக மயக்க ஊசி செலுத்தும் டாக்டர்கள் கலைவாணன், பாலசுப்பிரமணி ஆகியோர் சிவகங்கையில் இருந்து வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பெரிய கம்பில் ஊசியை சொருகி கரடிக்கு செலுத்த முயன்றனர். ஆனால் கரடி அங்குமிங்குமாக ஓடியதால் அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து வீட்டின் கதவு திறக்கப்பட்டு, அதன் நுழைவு வாயிலில் கூண்டு வைக்கப்பட்டது. பின்னர் வீட்டின் வெளியே பட்டாசு வெடிக்கப்பட்டது. இதனால் பயந்த கரடி வீட்டில் இருந்து வெளியே வந்து கூண்டிற்குள் புகுந்தது. கூண்டுக்குள் புகுந்த கரடி கம்பிகளை கடித்து குதறியதால் வாயில் இருந்து ரத்தம் வழிந்தது. பின்னர் டாக்டர்கள், கரடி உடலில் மயக்க ஊசியை செலுத்தினர்.

8 மணி நேர போராட்டம்

ஆக்ரோஷமாக காணப்பட்ட கரடி மெல்ல மெல்ல மயக்க நிலையை அடைந்தது. அதன்பின்னர் கரடியை பிடித்து முதலுதவி சிகிச்சை அளித்து வனத்துறையினர் வாகனத்தில் ஏற்றி சென்றனர்.

7 வயதான கரடிக்கு உரிய சிசிக்சை அளிக்கப்பட்ட பிறகு, கரடியை ஆண்டிப்பட்டி கணவாய் மலைப்பகுதியில் விட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். சுமார் 8 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் கரடி மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. விவசாயி வீட்டிற்குள் கரடி புகுந்த சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்