அந்தியூர் அருகே பரபரப்பு தென்னை நார் கழிவுகளை கொட்டிய லாரி சிறைபிடிப்பு

அந்தியூர் அருகே தென்னை நார் கழிவுகளை கொட்டிய லாரி சிறைபிடிக்கப்பட்டது

Update: 2023-06-20 20:22 GMT

அந்தியூர் அருகே தென்னை நார் கழிவுகளை கொட்டிய லாரியை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

லாரி சிறைபிடிப்பு

அந்தியூர் அருகே உள்ள அத்தாணி- சத்தியமங்கலம் ரோட்டில் தென்னை நார் கழிவுகள் கொட்டப்படுவதால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் அத்தாணி- சத்தியமங்கலம் ரோட்டில் தென்னை நார் கழிவுகள் லாரி ஒன்றில் இருந்து கொட்டப்பட்டது. இதை கண்டதும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு சென்று லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அத்தாணி நில வருவாய் ஆய்வாளர் பெரியசாமி, கிராம நிர்வாக அலுவலர் பானு ரேகா, பேரூராட்சி அலுவலர் பூபதி ராஜா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறுகையில், 'செம்புளிச்சாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நார் தொழிற்சாலையில் இருந்து தென்னை நார் கழிவுகள் இ்ங்குள்ள அத்தாணி- சத்தியமங்கலம் ரோட்டில் மற்றும் நீரோடைகளில் கொட்டப்படுகின்றன. இதனால் இந்த பகுதியில் நிலத்தடி நீர் மாசுபடுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு உள்ளது.

மேலும் தென்னை நாா் கழிவுகளின் துகள்கள் காற்றில் பறந்து வந்து அந்த வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகளின் கண்கள் மீது விழுகின்றன. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே இந்த பகுதியில் தென்னை நார் கழிவுகள் கொட்டக்கூடாது,' என்றனர்.

பரபரப்பு

அதற்கு பொதுமக்களிடம் அதிகாரிகள் பதில் அளிக்கையில், 'இனி இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

இதில் பொதுமக்கள் சமாதானம் அடைந்து லாரியை விடுவித்து அங்கிருந்து 9 மணி அளவில் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்