வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களுக்கு தொழில் கடன்-கலெக்டர் தகவல்
கொரோனா காலத்தில் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களுக்கு மானியத்தில் தொழில் கடன் வழங்கப்படுகிறது என்று நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்து உள்ளார்.
கொரோனா காலத்தில் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களுக்கு மானியத்தில் தொழில் கடன் வழங்கப்படுகிறது என்று நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
கொரோனா பெருந்தொற்று
கொரோனா பெருந்தொற்று பரவிய போது வெளிநாட்டில் வேலை இழந்து தமிழ்நாடு திரும்பிய தமிழர்கள் தொழில் தொடங்கிட விரும்புவோரை ஊக்குவிப்பதற்காக அவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் மானியத்துடன் தொழில் கடன் வழங்கப்படுகிறது. குறு தொழில்கள் செய்திட அதிகபட்சமாக ரூ.2½ லட்சம் மானியத்துடன் கூடிய கடன் வசதி செய்ய செய்து தரப்படும்.
மைக்ரான்ஸ் எம்பிளாய்மெண்ட் ஜெனரேஷன் புரோகிராம் (எம்.இ.ஜி.பி.) என்ற திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்.
மானியம்
வெளிநாட்டில் வேலை செய்து கடந்த 1.1.2020 தேதி அல்லது அதற்கு பிறகு வெளிநாட்டில் இருந்து தமிழ்நாடு திரும்பி வந்தவராக இருக்க வேண்டும். உற்பத்தி துறையை பொருத்தமட்டில் அதிகபட்ச திட்டச் செலவு ரூ.15 லட்சத்துக்குள்ளும், சேவை மற்றும் வணிகத்துறை பொறுத்தமட்டில் அதிகபட்ச திட்ட செலவு ரூ.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். தொழில் முனைவோரின் முதலீடு பொதுப்பிரிவினருக்கு திட்ட மதிப்பில் 10 சதவீதமும், சிறப்பு பிரிவினருக்கு திட்ட மதிப்பீட்டில் 5 சதவீதமும் இருக்க வேண்டும். அரசு மானியத் தொகையாக திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அதாவது அதிகபட்சமாக ரூ.2½ லட்சம் வரை வழங்கப்படும்.
இந்த திட்டத்துக்கு விண்ணப்பிப்போர் நெல்லை மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அலுவலகத்தில் பாஸ்போர்ட், விசா நகல், கல்வி, இருப்பிட சான்று, சாதி சான்று, மாற்றுத்திறனாளிகளுக்கான சான்று மற்றும் திட்ட விவரங்களுடன் விண்ணப்பத்தை சமர்ப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.