சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானம் அருகே பஸ்-டிப்பர் லாரி மோதல்; கல்லூரி மாணவிகள் 3 பேர் காயம்
சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானம் அருகே தனியார் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவிகள் 3 பேர் காயம் அடைந்தனர் இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பஸ்-டிப்பர் லாரி மோதல்
சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து கன்னங்குறிச்சிக்கு நேற்று காலை 8.40 மணி அளவில் தனியார் பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ்சை அன்னதானப்பட்டி வள்ளுவர்நகரை சேர்ந்த நவீத் (30) என்பவர் ஓட்டினர்.
இந்த பஸ் முள்ளுவாடி ரெயில்வே கேட், தொங்கும் பூங்கா வழியாக தான் கன்னங்குறிச்சிக்கு செல்வது வழக்கம். ஆனால் நேற்று காலை முள்ளுவாடி கேட்டில் ரெயிலுக்காக கேட் அடைக்கப்பட்டது.
இதனால் நவீத் பஸ்சை 4 ரோடு வழியாக ஓட்டினார். இந்த பஸ் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தை தாண்டி ஆத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது ராஜாராம் நகரில் இருந்து லீ பஜாருக்கு டிப்பர் லாரி ஒன்று வந்தது. இந்த லாரியை திப்பம்பட்டியை சேர்ந்த லோகநாதன் (25) என்பவர் ஓட்டினார். அந்த இடத்தில் அவர் முன்னால் சைக்கிளில் சென்றவரை முந்தி செல்ல முயன்றார். அப்போது லாரியும், தனியார் பஸ்சும் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.
கல்லூரி மாணவிகள் காயம்
இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி சுக்குநூறாக உடைந்து சிதறியது. பஸ்சின் பக்கவாட்டு பகுதியும் சேதமடைந்தது. உடைந்த கண்ணாடி துகள்கள் பஸ்சில் பயணம் செய்த அரசு கலை கல்லூரியில் படிக்கும் 3 மாணவிகள் மீது விழுந்தது. இதில் காயம் அடைந்த அவர்களை சிகிச்சைக்காக அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். விபத்தால் அந்த இடத்தில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் போக்குவரத்தை சீர்செய்தனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.