பிரான்மலையில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும்

சுற்றுலா தலமான பிரான்மலையில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2022-09-27 18:45 GMT

 சிங்கம்புணரி,

சுற்றுலா தலமான பிரான்மலையில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பிரான்மலை

சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலா தலங்களில் ஒன்றாக கருதப்படும் முல்லைக்கு தேர் கொடுத்த பாரி ஆண்ட பரம்பு மலை என்று அழைக்கப்படும் பிரான்மலை உள்ளது. இந்த பிரான்மலை ஊராட்சிக்கு உட்பட்ட 9 குக்கிராமங்களில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி புதுக்கோட்டை, திருச்சி, மதுரை மாவட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய வகையில் மையப்பகுதியில் அமைந்துள்ளது.

இந்த பிரான்மலை கடை ஏழு வள்ளல்கள் ஆண்ட பகுதியாகும். இங்கு திருக்கைலாய பரம்பரை குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம், பிரான்மலை ஐந்து கோவில் தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற மங்கைபாகர் தேனம்மை கோவிலும் உள்ளது. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற திருத்தலம் இது.

பஸ் நிலையம்

இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த பிரான்மலை பகுதியில் பல ஆண்டுகளாக பஸ் நிலையம் இல்லை. சுற்றுலா தலமாக உள்ள இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணகள் வந்து செல்கின்றனர். இங்கு பஸ் நிலையம் இல்லாததால் சாலை ஓரத்தில் பயணிகளை இறக்கி விட்டு செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

இப்பகுதியில் பஸ் நிலையம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் ஊரின் மையப்பகுதியில் தற்போதைய இ-சேவை மையம் மற்றும் புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்திற்கு அருகில் மூன்று ஏக்கர் பரப்பளவில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் புதிய பஸ் நிலையம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் என்ன காரணத்திற்காகவோ அது கைவிடப்பட்டதாக தெரிகிறது. எனவே, பிரான்மலையில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்