பெத்தநாயக்கன்பாளையம்
ஏத்தாப்பூர் அருகே சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வளைவில் திரும்ப முயன்ற லாரி மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் லாரி டிரைவர் உள்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
தனியார் பஸ்-லாரி மோதல்
சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு நேற்று காலை தனியார் பஸ் புறப்பட்டு சென்றது. பஸ்சில் 50-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
இந்த பஸ் வாழப்பாடி அருகே உள்ள பெரியகிருஷ்ணாபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற லாரி ஒன்று வலது புறமாக திரும்பியது.
இதை அறிந்த தனியார் பஸ் டிரைவர் உடனே பஸ்சை நிறுத்த முயன்றார். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் தனியார் பஸ்சும், லாரியும் மோதிக்கொண்டன. இதில் பஸ்சில் வந்த 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். லாரி டிரைவர், கிளீனரும் படுகாயம் அடைந்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
விபத்து குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் உடனே விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் வாழப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒருமணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதித்தது.
விபத்து குறித்து ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.