தொழிலாளி விபத்தில் பலியானத்திற்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

தாராபுரம் நகராட்சி துப்புரவு தொழிலாளி விபத்தில் பலியானத்திற்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ்சை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து நீதி மன்றத்தில் நிறுத்தினர்.

Update: 2023-02-23 17:13 GMT

தாராபுரம் நகராட்சி துப்புரவு தொழிலாளி விபத்தில் பலியானத்திற்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ்சை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து நீதி மன்றத்தில் நிறுத்தினர்.

தொழிலாளி பலி

தாராபுரம் ஜவர்கர் நகர் தெருவை சேர்ந்த கண்ணன் மகன் முருகன் (வயது 33). நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 22.07.2013 அன்று தாராபுரத்தில் இருந்து உடுமலைக்கு அரசு பஸ்சில் பயணம் செய்த போது பஸ் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முருகன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்த விபத்தில் பலியான முருகனின் மனைவி மகேஷ் மற்றும் மகன் கார்த்தி, மகள்கள் வேணி, ராணி, தாயார் மகேஸ்வரி ஆகியோர் நஷ்டஈடு கேட்டு தாராபுரம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எஸ்.டி.சேகர் மூலம் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 21.11.2017 அன்று ஒரு உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவில் விபத்தில் பலியான முருகன் குடும்பத்தினருக்கு ரூ.16 லட்சத்து 20 ஆயிரத்து 507-ஐ அரசு ேபாக்குவரத்து கழகம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

அரசு பஸ் ஜப்தி

ஆனால் அரசு போக்குவரத்து கழகம் நஷ்டஈடு தொகையை உரிய காலத்தில் வழங்கவில்லை. இதையடுத்து மனுதாரர்கள் மீண்டும் தாராபுரம் சார்பு நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த சார்பு நீதிபதி எம். தர்மபிரபு, விபத்தில் பலியான முருகன் குடும்பத்துக்கு நஷ்டஈட்டு தொகையாக ரூ.27 லட்சத்து 21 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்யவும் உத்தரவிட்டார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று காலை 11.30 மணிக்கு கோவையிலிருந்து மதுரை செல்வதற்காக தாராபுரம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்த அரசு பஸ்சை நீதிமன்ற அமீனா சுதாமணி ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்