பஸ் ஒப்பந்ததாரர் தூக்குப்பொட்டு தற்கொலை
மனைவி வீட்டார் தாக்கியதால் மனவேதனை அடைந்த பஸ் ஒப்பந்ததாரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காவேரிப்பாக்கம்
மனைவி வீட்டார் தாக்கியதால் மனவேதனை அடைந்த பஸ் ஒப்பந்ததாரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகார் மீது வழக்குப்பதிவு செய்யாததால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
பணியாளர்களை ஏற்றி செல்லும் பஸ்
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அன்னை சத்யாநகா் பகுதியைச் சோ்ந்தவர் ஜெயகுமார் (வயது 38). இவர், சோளிங்கரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துக்கு பணியாளா்களை ஏற்றி செல்லும் பஸ்சை ஒப்பந்த முறையில் எடுத்து நடத்தி வந்தார்.
இவருக்கும், பெங்களூருவை அடுத்த கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சோ்ந்த கன்னியப்பனின் மகள் தீபாவுக்கும் 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு 8 வயதில் தனுஷ்கா என்ற மகளும், 2½ வயதில் ராகேஷ் என்ற மகனும் உள்ளனர்.
2-வது குழந்தையின் பிரசவத்துக்காக கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றிருந்த தீபா இதுவரை கணவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை, எனக் கூறப்படுகிறது.
தற்கொலை
மனைவி, குழந்தைகளை பார்ப்பதற்காக 8-ந்தேதி ஜெயகுமார் கிருஷ்ணராஜபுரம் சென்றுள்ளார். அங்கிருந்த மனைவி தீபா மற்றும் அவருடைய குடும்பத்தார் ஜெயகுமாரை சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதில், அவர் பலத்த காயம் அடைந்தார்.
9-ம் தேதி அங்கிருந்து ஜெயகுமார் வீடு திருப்பினார். வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். எனினும், மனைவி வீட்டார் தன்னை தாக்கி விட்டார்களே என்ற மனவேதனையில் இருந்து வந்த ஜெயகுமார் நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டில் மின் விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முற்றுகை
இதுகுறித்து உறவினா்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு பாணாவரம் போலீசார் விரைந்து வந்து அவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஜெயகுமாரின் தாயார் அன்சா பாணாவரம் போலீசில் புகார் செய்தார். ஆனால், நேற்று மாலை வரை போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை, எனத் தெரிகிறது. இதைக் கண்டித்து அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பாணாவரம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.