சேலம் அருகே பஸ் மோதி கட்டிட தொழிலாளி பலி

சேலம் அருகே பஸ் மோதி கட்டிட தொழிலாளி பலியானார்.

Update: 2022-06-23 20:51 GMT

கொண்டலாம்பட்டி:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சக்திவேல் நகரை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 42), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி அலமேலு (40). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அலமேலு கணவரிடம் கோபித்து கொண்டு கொண்டலாம்பட்டி அருகே சிவதாபுரத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். இதனிடையே தனது மனைவியை வீட்டுக்கு திரும்ப அழைத்து வருவதற்காக திருச்செங்கோட்டில் இருந்து தமிழரசன் மொபட்டில் சிவதாபுரத்துக்கு வந்தார். அங்கு பெற்றோர் வீட்டில் இருந்த மனைவி அலமேலுவை தன்னுடன் வீட்டுக்கு வருமாறு அழைத்தார். அப்போது அலமேலு வருவதற்கு மறுத்து விட்டார். இதையடுத்து தமிழரசன் மீண்டும் திருச்செங்கோட்டுக்கு மொபட்டில் திரும்பி சென்றார்.

நெய்க்காரப்பட்டி பிரிவு ரோட்டை அவர் மொபட்டில் கடக்கும் போது கோவையில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு தனியார் பஸ் மொபட் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், கொண்டலாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தமிழரசனை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தமிழரசன் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்