கபிலர்மலையில்நிறுத்தப்பட்ட பஸ்களை இயக்ககோரி பொதுமக்கள் கடையடைப்பு- சாலை மறியல்அதிகாரிகள் பேச்சுவார்த்தை

Update: 2023-01-23 18:45 GMT

பரமத்திவேலூர்:

கபிலர்மலையில் நிறுத்தப்பட்ட பஸ்களை இயக்ககோரி பொதுமக்கள் கடையடைப்பு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பஸ்கள் நிறுத்தப்பட்டன

பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வழியாக கடந்த கொரோனா காலத்திற்கு முன்பு டவுன் பஸ்கள், அரசு பஸ்கள், தனியார் மற்றும் மினி பஸ்கள் அதிகளவில் இயக்கப்பட்டு வந்தன. கொரோனா காலத்துக்கு பின்னர் கால அட்டவணைப்படி இயக்கப்பட்டு வந்த பஸ்கள் நிறுத்தப்பட்டன. இதனால் கபிலர்மலையில் இருந்து நாமக்கல், பரமத்தி வேலூர், பரமத்தி, ஜேடர்பாளையம், திருச்செங்கோடு மற்றும் ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வந்த தொழிலாளர்கள், விவசாயிகள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் சிரமம் அடைந்தனர்.

மேலும் கபிலர்மலையை சேர்ந்தவர்கள் ஜேடர்பாளையம், பாண்டமங்கலம் பகுதிகளுக்கு சென்று அங்கிருந்து தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இதுகுறித்து போக்குவரத்து துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

சாலை மறியல்

இந்த நிலையில் நிறுத்தப்பட்ட பஸ்களை இயக்க கோரியும், கபிலர்மலை கடைவீதி 4 ரோடு சாலையை அகலப்படுத்த கோரியும் நேற்று கபிலர்மலை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடைகளை அடைத்தும், 4 ரோடு பகுதியில் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி, பரமத்திவேலூர் தாசில்தார் கலைச்செல்வி, அரசு போக்குவரத்து கழக மண்டல மேலாளர் கணேஷ்குமார், நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு அரசு போக்குவரத்து மேலாளர்கள் துரைசாமி, முரளி, பரமத்திவேலூர் தாலுகா வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சரவணன் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், கபிலக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் வடிவேல், கபிலர்மலை ஒன்றிய அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் குணசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்கமணி ஆகியோர் கடையடைப்பு மற்றும் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கடைகள் திறக்கப்பட்டன

அதில் உடன்பாடு ஏற்பட்டதால் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனை தொடர்ந்து அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு வழக்கம்போல் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்