சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி செல்லும் அரசு பஸ்சில் மழைநீர் ஒழுகும் வீடியோ வைரல்- தகுதி சான்றை ரத்து செய்து அதிகாரி நடவடிக்கை

சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி செல்லும் அரசு பஸ்சில் மழைநீர் ஒழுகும் வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து அந்த பஸ்சின் தகுதி சான்றை ரத்து செய்து அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.

Update: 2022-11-13 18:45 GMT

சத்தியமங்கலம்

சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி செல்லும் அரசு பஸ்சில் மழைநீர் ஒழுகும் வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து அந்த பஸ்சின் தகுதி சான்றை ரத்து செய்து அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.

தொடர் மழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த பகுதி வலுவடைந்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக ஒரு சில இடங்களில் பலத்த மழையாகவும், சில இடங்களில் சாரல் மழையாக தொடர்ந்தும், விட்டு விட்டும் பெய்து வருகிறது.

அதேபோல் ஈரோடு மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.

பஸ்சில் மழைநீர் ஒழுகல்

இந்த நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி செல்லும் அரசு பஸ்சில் பயணிகள் சிலர் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த பஸ்சின் மேற்கூரையில் உள்ள துவாரம் வழியாக மழை நீர் சொட்டு சொட்டாக ஒழுகி கொண்டிருந்தது. இதனால் இருக்கைகள் நனைந்ததால் பயணிகள் உட்கார முடியாமல் சிரமப்பட்டனர். முதியவர்கள் உள்ளிட்டோர் நின்று கொண்டே பயணித்தனர்.

இந்த காட்சியை பஸ்சில் பயணித்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். இது வைரலாகியது.

தகுதி சான்று ரத்து

இது குறித்து தகவல் அறிந்த சத்தியமங்கலம் மோட்டார் வாகன ஆய்வாளர் கண்ணன் சம்பந்தப்பட்ட அரசு பஸ்சை ஆய்வு செய்தார். அப்போது பஸ்சுக்குள் மழை நீர் ஒழுகியதை உறுதி செய்தார். இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அரசு பஸ்சின் தகுதி சான்றை ரத்து செய்து நடவடிக்கை எடுத்தார்.

இதையடுத்து அந்த பஸ் சத்தியமங்கலம் போக்குவரத்து பணிமனைக்கு கொண்டு சென்று நிறுத்தப்பட்டது. அந்த பஸ்சுக்கு பதிலாக மாற்று பஸ் அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்