பயணிகளின் மனம் கவராத அரசு விரைவு பஸ்கள்
ஆம்னி பஸ்சுகளுக்கு சாதகமாக அரசு பஸ்கள் சேவை குறைபாடாக இருப்பதாக பயணிகள் தெரிவித்து உள்ளனர்.
ஆம்னி பஸ்சுகளுக்கு சாதகமாக அரசு பஸ்கள் சேவை குறைபாடாக இருப்பதாக பயணிகள் தெரிவித்து உள்ளனர்.
7 அதிவிரைவு பஸ்கள்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்தின்கீழ் உள்ள காரைக்குடி மண்டலத்தில் காரைக்குடி, ராமநாதபுரம் என 2 துணை மண்டலங்கள் உள்ளன.
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் ராமநாதபுரம், ராமேசுவரம், பரமக்குடி, கமுதி, ஒப்பிலான் ஆகிய ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு 7 அதிவிரைவு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
பொதுவாக அரசு அதிவிரைவு பஸ்கள் உள்ளே மாசு நிறைந்து அலங்கோலமாக காட்சி அளிக்கிறது. நீண்டதூர பயணத்தின் போது பயணிகளின் சவுகரியத்துக்கு ஏற்ப சீரான இடைவெளியில் கழிப்பிட வசதிகள் உள்ள இடங்களில் நிற்பது இல்லை. தரம் இல்லாத உணவங்களிலேயே தங்களது லாபத்துக்காக பஸ்களை டிரைவர்கள், கண்டக்டர்கள் நிறுத்துகின்றனர் என்று குற்றச்சாட்டுகளை பயணிகள் முன்வைக்கின்றனர்.
இருக்கைகள் சொகுசாக இல்லை
இதுகுறித்து அரசு அதிவிரைவு பஸ் பயணிகள் கூறியதாவது:-
பனைக்குளம் ஆசிக்கனி: எங்கள் பகுதியில் இருந்து மருத்துவ சிகிச்சை மற்றும் வெளி மாநிலங்கள், வெளிநாடு செல்ல ஏராளமான பயணிகள் சென்னைக்கு அரசு விரைவு பஸ்களில் சென்று வருகின்றனர். இந்த பஸ்களில் இருக்கைகள் நெடுந்தூர பயணத்துக்கு ஏற்வாறு சொகுசாக இல்லை. எனவே நவீன வசதியுடன் கூடிய விரைவுபஸ்களை ராமநாதபுரம் மாவட்டத்துக்கு ஒதுக்கி இயக்க வேண்டும்.
ராமநாதபுரம் செந்தில்குமார்: ராமநாதபுரத்தில் இருந்து தொலைதூரம் செல்ல குறைந்த கட்டணத்தில் பயணம் செய்யமுடிகிறது. ராமநாதபுரம்- சென்னைக்கு ரூ. 790 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. நவீன வசதியுடன் கூடுதலாக பஸ்கள் இயக்கினால் அனைத்து பயணிகளும் அரசு பஸ்சில் பயணம் செய்ய வாய்ப்பாக இருக்கும்.
வசதியாக இல்லை
ராமேசுவரம் சமூக ஆர்வலர் தில்லை பாக்கியம்: இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ராமேசுவரம் வந்து செல்கின்றனர். இவ்வாறு ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகள் வந்து செல்ல வசதியாக அதிவிரைவு பஸ்கள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அனைத்து சுற்றுலா பயணிகளின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி தமிழக அரசு மூலம் ராமேசுவரத்தில் இருந்து பல்வேறு மாநிலம் மற்றும் தொலைதூரங்களுக்கும் அதிநவீன வசதிகளுடன் கூடிய அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டிக்கெட்
பரமக்குடியைச் சேர்ந்த சட்ட உரிமைகள் கழகத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராம கிருஷ்ணன்: சென்னை செல்லும் அதிவிரைவு பஸ்கள் பதிவு செய்யும் அலுவலகம் பஸ் நிலையத்தில் இருந்தால் பயணிகளுக்கு டிக்கெட் எடுப்பதற்கு ஏதுவாக இருக்கும். வெளியில் இருப்பதால் எங்கு டிக்கெட் எடுப்பது என தெரியாமல் பயணிகள் அவதிப்படுகின்றனர். குறிப்பாக கிராம மக்களுக்கு எங்கு சென்று டிக்கெட் எடுப்பது என்று தெரியவில்லை. எனவே பரமக்குடியில் இருந்து மதுரை சென்று அங்கு இருந்து சென்னை செல்கின்றனர்.
வருவாய் இழப்பு
இதனால் பஸ்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு ஏ.சி. பஸ் பரமக்குடியில் இருந்து இயக்கப்பட்டது. தற்போது அந்த பஸ் வருவதில்லை. சாதாரண பஸ் தான் பரமக்குடியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படுகிறது. எனவே அதை மீண்டும் இயக்கினால் நன்றாக இருக்கும். சரியான நேரத்திற்கு பஸ்கள் வருவதில்லை. தனியார் ஆம்னி பஸ்களுக்கு சாதகமாக அரசு விரைவு பஸ்கள் செயல்படுகின்றன. இதனால் பயணிகள் காத்துக் கிடக்கும் அவல நிலை உள்ளது. பஸ்கள் வரும் நேரத்தை ஒழுங்கு முறைப்படுத்தினால் பயணிகளுக்கு ஏதுவாக இருக்கும்.
சாயல்குடி சதாம்: சாயல்குடியில் இருந்து சென்னைக்கு செல்வதற்கு ஒரு அரசு சொகுசு பஸ் மட்டுமே சென்று வந்தது. அமைச்சர் ராஜகண்ணப்பன் நடவடிக்கையால் கூடுதலாக ஒரு அதிவிரைவு பஸ் இயக்கப்படுகிறது. தனியார் பஸ்சை காட்டிலும் மிகவும் குறைந்த கட்டணம். சாயல்குடியில் இருந்து ரூ.570 மட்டுமே செலுத்தி சென்னைக்கு சென்று வருகிறோம். கூடுதலாக சொகுசு அதிவிரைவு பஸ்களை இயக்கவேண்டும்.
கமுதி முத்துக்குமார்:- கமுதியில் இருந்து சென்னைக்கு மாலை 6 மணி அளவில் தமிழ்நாடு அரசு விரைவு பஸ் இயக்கப் படுகிறது. இதில் பயணம் செய்ய ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்ய வேண்டும். ஆனால் ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்ய முடியாமல் பொது மக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர். தனியார் ஆம்னி பஸ்களுக்கு ஆதரவாக, சாதகமாக அரசு பஸ்கள் செயல் படுகின்றன. மாலை 6 மணிக்கு எடுக்க வேண்டிய பஸ்சை 5.30 மணிக்கே எடுத்துச் சென்று விடுகின்றனர். கமுதியில் இருந்து சென்னைக்கு அரசு விரைவு பஸ் கட்டணம் ரூ.530-க்கு பதிலாக கூடுதலாக வசூல் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்களும், வியாபாரிகளும் பாதிக்கப் படுகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.