கோவையில் கவர்னரின் உருவ பொம்மை எரிப்பு
கோவையில் கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து உருவப்பொம்மையை எரித்தும், கவர்னருக்கு ஆதரவு தெரிவித்தும் போராட்டம் நடந்தது. இதில் 80 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை
கோவையில் கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து உருவப்பொம்மையை எரித்தும், கவர்னருக்கு ஆதரவு தெரிவித்தும் போராட்டம் நடந்தது. இதில் 80 பேர் கைது செய்யப்பட்டனர்.
கவர்னருக்கு கண்டனம்
சட்டசபை மரபை மீறிய கவர்னர் ஆர்.என். ரவியின் செயலுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தமிழகம் முழுவதும் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பேராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் கவர்னரை கண்டித்து கோவை காந்திபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலை அருகே கவர்னரின் உருவபொம்மை எரிக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று காலை 10 மணியளவில் அமைப்பு செயலாளர் ஆறுச்சாமி தலைமையில் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் கையில் கொடியை ஏந்தியவாறு அங்கு திரண்டனர். பின்னர் அவர்கள் கவர்னரை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்.
உருவபொம்மை எரிப்பு
அப்போது அவர்கள் திடீரென்று கவர்னர் ஆர்.என்.ரவியின் உருவபொம்மையை பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொளுத்தினார்கள். இதை அங்கு பாதுகாப்பு பணியில் நின்றிருந்த போலீசார் தடுக்க முயன்றனர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசார் எரிந்து கொண்டு இருந்த உருவபொம்மையை மீட்டு தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட அந்த அமைப்பை சேர்ந்த 19 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுபோன்று கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு திராவிடர் இயக்க தமிழர் பேரவை சார்பில் மாவட்ட செயலாளர் சிலம்பரசன் தலைமையில் கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தமிழக கவர்னரை பதவி நீக்கம் செய்யக்கோரி கோஷம் எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 17 ேபரை போலீசார் கைது செய்தனர்.
ஆதரவு பேராட்டம்
இதற்கிடையே, கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நடத்திய போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கவர்னருக்கு ஆதரவு தெரிவித்தும் பா.ஜனதா சார்பில் கோவை வி.கே.கே.மேனன் ரோட்டில் உள்ள பா.ஜனதா மாவட்ட அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 44 பேரை போலீசார் கைது செய்தனர்.கோவையில் கவர்னரை கண்டித்தும், ஆதரவு தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்ட மொத்தம் 80 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுபோல் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கவர்னரை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.