வீடுபுகுந்து ரூ.2¾ லட்சம் நகை-பணம் திருட்டு
ராமநத்தம் பகுதியில் வீடுபுகுந்து ரூ.2¾ லட்சம் நகை-பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
ராமநத்தம்,
ராமநத்தம் அருகே உள்ள கொரக்கவாடி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் காந்தி (வயது 50). இவர் நேற்று முன்தினம் இரவு தனக்கு சொந்தமான வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள இன்னொரு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இரவில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கம், 3½ பவுன் நகைகள் ஆகியவற்றை திருடிச்சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.2¾ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இது குறித்து காந்தி கொடுத்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். ராமத்தம் பகுதியில் தொடர்ந்து திருட்டு, கொள்ளை சம்பவம் நடந்து வருவதால் அச்சமடைந்து வரும் பொதுமக்கள் இரவு நேர ரோந்து காவலை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.