ஓய்வு பெற்ற சுகாதார துறை அதிகாரி வீட்டில் திருட்டு
விக்கிரவாண்டியில் ஓய்வு பெற்ற சுகாதார துறை அதிகாரி வீட்டில் நடந்த திருட்டு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி ஆகாட்டம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் (வயது 73) ஓய்வு பெற்ற சுகாதாரத்துறை நிர்வாக அதிகாரி. இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவி தனலட்சுமியுடன் கத்தார் நாட்டிற்கு சென்றார். இந்த நிலையில் இவரது வீட்டு கதவின் பூட்டு நேற்று உடைக்கப்பட்டு கிடந்தது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே செல்போன் மூலம் பாலசுப்ரமணியனிடமும், விக்கிரவாண்டி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் காத்தமுத்து தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் பாலசுப்ரமணியன் வெளிநாடு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், அவரது வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த 3 கிராம் தங்க மோதிரம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச்சென்றது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.