மருத்துவ பரிசோதனைக்கு பிறகே காளைகள் பங்கேற்க அனுமதிக்கப்படும்

மருத்துவ பரிசோதனை செய்த பிறகே எருதுவிடும் விழாவில் காளைகள் பங்கேற்க அனுமதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2023-01-04 16:39 GMT

வேலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள எருதுவிடும் திருவிழாவுக்கு விழாக்குழுவினர் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

கட்டுப்பாடுகள்

விழாக்குழுவினர் கலெக்டரால் அனுமதிக்கப்படும் நாட்களில் அனுமதிக்கப்படும் இடத்தில் மட்டுமே விழா நடத்த வேண்டும். வருகிற 9-ந் தேதி விழா நடைபெறும் நாள் குறித்து தெரிவிக்கப்படும். காப்பீடு செய்ததற்கான ஆவணம், வரைவோலை, பிரமாண பத்திரம் ஆகியவற்றுடன் கலெக்டருக்கு சமர்ப்பிக்க வேண்டும். அப்போது விழாவில் பங்கேற்கும் காளைகளின் எண்ணிக்கை மற்றும் காளைகளின் பட்டியல் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

அரசு தெரிவித்துள்ள கொரோனா கட்டுப்பாடு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். விழா நடைபெறும் இடம் திறந்தவெளி மைதானமாகவும், குடியிருப்புகளுக்கு தொலைதூரத்தில் உள்ளதாக அமைந்துள்ள திடலினை தேர்வு செய்து அந்த திடலின் வரைபடத்தை கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனரிடம் அங்கீகாரம் பெற வேண்டும்.

பரிசோதனைக்கு பிறகு

கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனரால் அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தின்படி விழா திடல் அமைக்கப்படும் என ஒப்பந்ததாரருடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்த பத்திரம் வழங்க வேண்டும். காளை, ஓடு பாதையான வாடிவாசல் முதல் சேரும் இடம் வரை 8 அடி உயரத்தில் தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும். அதேபோல ஓடுதளம் முடியும் இடத்திலும் 8 அடி உயரத்தில் வாயில் அமைக்கப்பட வேண்டும். இந்திய விலங்குகள் நலவாரியத்தில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு பேனர்கள் வைக்கப்பட வேண்டும்.

பங்குபெறும் காளைகளுக்கு தேவையான அளவு தங்குமிடம், தண்ணீர்வசதி மற்றும் தீவன வசதி ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு காளைகளுடனும் அந்த காளையின் பாதுகாப்பு கருதி அதன் உரிமையாளர் அருகிலேயே இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு காளையும் கால்நடைத்துறை மருத்துவர்களால் உரிய பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகு மட்டுமே அனுமதிக்கப்படும். செயல்திறனை அதிகரிக்கும் மற்றும் எரிச்சலூட்டும் மருந்துகள் செலுத்தப்பட்ட காளைகளுக்கு அனுமதியில்லை.

பாதுகாப்பாக...

பார்வையாளர்கள், அரசு அலுவலர்களுக்கு உரிய முறையில் உணவு மற்றும் குடிநீர், கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும். விழா தளத்தில் ஒலிபெருக்கிகள் முறையாக ஏற்பாடு செய்யப்பட வேண்டும். வாடிவாசல், விழா அரங்கம் ஆகியவற்றை முழுமையாக கண்காணிக்க கண்காணிப்பு கேமரா வசதி அல்லது வெப் கேமரா வசதி ஏற்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு காளையும் ஒரு சுற்று மட்டுமே ஓட அனுமதிக்கப்படும். காளையின் உரிமையாளர்கள் காளைகளுக்கு போதிய ஓய்வு அளித்து, மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு அழைத்துவரவேண்டும். விழா முடிந்ததும் போதிய ஓய்வு அளித்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு செல்லவேண்டும். மேலும் ஓடு பாதையின் இறுதியில் காளைகளை பாதுகாப்பாக பிடித்து அழைத்துச் செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்