மணல் விலை உயர்வால் மாட்டுவண்டி தொழிலாளர்கள் போராட்டம்

வேலூர் அருகே மணல் விலை உயர்வால் மாட்டுவண்டி தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். கலெக்டரிடம் கோரிக்கை மனுவும் அளித்தனர்.

Update: 2023-01-04 16:46 GMT

மாட்டுவண்டி தொழிலாளர்கள்

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா, அரும்பருத்தி கிராமத்தில் தமிழக அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு அள்ளப்படும் மணல் வேலூர் மாவட்டம் பெருமுகை கிராமத்தில் அரசு மணல் விற்பனை கிடங்கில் சேகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கும், லாரி உரிமையாளர்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு மணல் விற்பனை செய்வதற்கான புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி ஒரு மாட்டு வண்டிக்கு வரிகள் உள்பட மணல் விலை ரூ.800 செலுத்த வேண்டும் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கலெக்டரிடம் மனு

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு மணல் அள்ளுவதற்கான குறுந்தகவல் வந்தது. அதைத்தொடர்ந்து நேற்று காலை மணல் அள்ள மாட்டுவண்டிகளுடன் தொழிலாளர்கள் மணல் குவாரிக்கு சென்றனர். அப்போது உயர்த்தப்பட்ட தொகை ரூ.800 செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த தொகை அதிகமாக உள்ளதாக கூறி மாட்டுவண்டி தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார் மணல் குவாரிக்கு சென்று மாட்டுவண்டி தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இதுதொடர்பாக கலெக்டரிடம் மனு அளிக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

இதையடுத்து மாட்டுவண்டி தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் ஒரு மாட்டு வண்டிக்கு ரூ.800 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மாட்டுவண்டி தொழிலாளர்களாகிய நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். உயர்த்தப்பட்ட தொகையை ஏற்கனவே இருந்த ரூ.250-ஆக நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பரிசீலனை செய்வதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்