எட்டயபுரம்:
எட்டயபுரத்தில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவில்பட்டி தி.மு.க. கிழக்கு ஒன்றியம் மற்றும் எட்டயபுரம் நகர தி.மு.க. சார்பில் பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. எட்டயபுரம் - விளாத்திகுளம் சாலையில் நடந்த பந்தயத்தை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மொத்தம் 20 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதற்கு 4 கி.மீ.க்கு பந்தய தூரம் நிர்ணயம் செய்யப்பட்டது. பந்தயத்தில் பேரூரணி முருகன் சகோதரர்களுக்கு சொந்தமான காளைகள் முதலிடம் பிடித்து ரூ.20,000 பரிசு பெற்றது. 2-வது இடத்தை பெற்ற சீவலப்பேரி துர்காம்பிகா மாட்டு வண்டிக்கு ரூ.15,000-ம், 3-வது இடத்தை பிடித்த கன்னிமார்கூடத்தை சேர்ந்த மகாராஜா மாட்டு வண்டிக்கு ரூ.10,000-ம் பரிசு வழங்கப்பட்டது. இதில், கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் நவநீதிகண்ணன், பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.