மாட்டு வண்டி எல்கை பந்தயம்

திருமயம் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

Update: 2023-03-29 18:22 GMT

திருமயம் அருகே உள்ள ஆதனூர் கிராமத்தில் இளஞ்சாவூர் முத்துமாரியம்மன் பங்குனி பொங்கல் திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான மாட்டு வண்டி எல்கை பந்தயம் நேற்று நடைபெற்றது.

பந்தயமானது பெரிய மாடு, சிறிய மாடு என இருபிரிவாக நடத்தப்பட்டது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து மொத்தம் 18 மாடுகள் கலந்து கொண்டன. பந்தய தூரமாக பெரிய மாடுகளுக்கு 8 மைல், சிறிய மாடுகளுக்கு 6 மைல் நிர்ணயிக்கப்பட்டது.

முன்னதாக பெரியமாடு பிரிவில் 8 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. போட்டியில் வெற்றி இலக்கை நோக்கி காளைகள் சீறிப்பாய்ந்து சென்றன. இதில் முதல் பரிசை சிவகங்கை மாவட்டம் எரும்புகுடி செல்வராஜ், 2-ம் பரிசு நா.கொத்தமங்கலம் சேகர், 3-ம் பரிசு கப்பலூர் முத்து ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் வென்றன. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற சிறிய மாடு பிரிவில் 10 ஜோடி மாடுகள் கலந்து கொண்டனர். இதில் முதல் 4 இடங்களை பிடித்த மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பந்தயம் நடைபெற்ற நேமத்தான்பட்டி- கோனாபட்டு சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு நின்று பந்தயத்தை கண்டு ரசித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்