25 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த கட்டிட தொழிலாளி உயிரிழப்பு

முத்தூரில் 25 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-07-06 13:52 GMT

கட்டிட தொழிலாளி

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலுகா, கணியூர்,உப்பிலிய நாயக்கர் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். (வயது 34). கட்டிட தொழிலாளி. திருமணமாகாத இவர் முத்தூரில் தனது உறவினர் வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் மணிகண்டன் கடந்த 2-ந் தேதி முத்தூரில் உள்ள ஒரு தனியார் ஸ்பின்னிங் மில்லில் மேற்கூரையின் மேலே இருந்த பாதி உடைந்த சிமெண்டு சீட்டின் மேல் நின்று கொண்டு காரை போட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென்று எதிர்பாராத விதமாக சிமெண்டு சீட் உடைந்து சுமார் 25 அடி உயரத்தில் இருந்து மணிகண்டன் கீழே விழுந்தார்.

பரிதாப சாவு

இதில் மணிகண்டனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த அக்கம்,பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக மணிகண்டனை மீட்டுஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மணிகண்டனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் நேற்று முன்தினம் காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றிய புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்