ஆரம்பசுகாதார நிலையத்தை அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் கட்ட வேண்டும்

தஞ்சையை அடுத்த காசவளநாடுபுதூரில் ஆரம்ப சுகாதாரநிலையத்தை இடமாற்றம் செய்யாமல் ஏற்கனவே அடிக்கல் நாட்டப்பட்ட இடத்திலேயே கட்ட வேண்டும் என்று காசவளநாடு புதூர் கிராம மக்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Update: 2023-05-02 21:22 GMT

தஞ்சாவூர்;

தஞ்சையை அடுத்த காசவளநாடுபுதூரில் ஆரம்ப சுகாதாரநிலையத்தை இடமாற்றம் செய்யாமல் ஏற்கனவே அடிக்கல் நாட்டப்பட்ட இடத்திலேயே கட்ட வேண்டும் என்று காசவளநாடு புதூர் கிராம மக்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

ஆரம்ப சுகாதார நிலையம்

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தஞ்சையை அடுத்த காச வளநாடு புதூர் கிராம மக்கள் 75-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

தஞ்சையை அடுத்த காசவளநாடுபுதூர் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது. இந்த ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் காசவளநாடுபுதூர் மற்றும் அருகில் உள்ள 4-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைந்து வந்தனர். ஊருக்கு மையப்பகுதியில் செயல்பட்டு வந்த இந்த ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் பழுதடைந்தது. இதையடுத்து அந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.

பொதுமக்கள் சிரமம்

இந்த நிலையில் புதிதாக அமைய உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை, அதிகமாக மக்கள் வசிக்கும் இடத்தை விட்டுவிட்டு ஊரில் இருந்து 3 கி.மீ. தொலைவில் ஒதுக்குப்புறமாக கட்டுவதற்கான வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன. அந்த இடத்திற்கு வயதானவர்கள், குழந்தைகள், பெண்கள், கர்ப்பிணிகள் சென்றுவர மிகவும் சிரமமாக இருக்கும்.எனவே பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஏற்கனவே முடிவு செய்து அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் கட்டுவது சிறப்பாக இருக்கும். எனவே புது இடத்தை தவிர்த்து ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட இடத்தில் கட்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்