பண்ணை குட்டைகள் அமைத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும்

பண்ணை குட்டைகள் அமைத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.

Update: 2023-04-27 19:42 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் பண்ணை குட்டைகள் அமைத்து நிலத்தடிநீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் என ஊராட்சிமன்ற தலைவர்களை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தினார்.

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் 6 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

அப்போது கலெக்டர் பேசியதாவது:-

தங்குதடையின்றி குடிநீர்

மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு சென்றடைய வேண்டும். அனைத்து மக்களுக்கும் குளோரின் கலந்த குடிநீரை தங்குதடையின்றி வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் சரியாக பணிகளை மேற்கொள்ள வேண்டும். அனைவருக்கும் 100 நாட்கள் வேலை வழங்கப்பட்டு மக்களின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும்.

திடக்கழிவு மேலாண்மை பணிகளை சரியாக மேற்கொள்ள வேண்டும். அனைத்து பகுதிகளிலும் மணல்களை பாதுகாத்திட வேண்டும். தங்களது ஊராட்சிகளில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் இருந்தால் அவர்களை கண்டறிந்து, பள்ளிக்கு அனுப்பி, இடைநிற்றலை தடுக்க வேண்டும். பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பெண் குழந்தைகளை நன்கு படிக்கவைக்க உறுதுணையாக இருக்க வேண்டும்.

பண்ணை குட்டை

அனைத்து ஊராட்சிகளிலும் மழைநீரை சேகரிக்க வேண்டும். நீர் ஆதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். மாவட்டத்தில் அதிகளவில் பண்ணைக் குட்டைகளை அமைத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும். ஒருமுறை பயன்படுத்தப்படும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை முழுவதும் தவிர்க்க வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்க வேண்டும்.

பாலாற்றுக்கு அருகே உள்ள 15 ஊராட்சிகள் மூலமாக கழிவுநீர் கலக்கப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட நீரை மட்டும்தான் பாலாற்றில் விடவேண்டும். அனைவருக்கும் அனைத்தும் கிடைத்திட நீங்கள் பணிபுரிந்திட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் விஜயகுமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், துரை, விநாயகம், சித்ரகலா, கிருஷ்ணன், தினகரன், ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்