திருப்பூர்
திருப்பூரில் 200 அரங்குகளுடன் தொடங்கிய கட்டுமான பொருட்கள் கண்காட்சியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்.
கண்காட்சி
திருப்பூர் சிவில் என்ஜினீயர்ஸ் அசோசியேஷன் சார்பில் 18-வது கட்டிட கட்டுமான பொருட்கள் கண்காட்சி திருப்பூர் -தாராபுரம் ரோடு வித்யாகார்த்திக் திருமண மண்டபத்தில் நேற்று தொடங்கியது. இதன் தொடக்க விழாவிற்கு சங்கத்தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். கண்காட்சித் தலைவர் ராதாகிருஷ்ணன் விழா அறிக்கை வாசித்தார்.
பொறியியல் பொக்கிஷம்-2023 கண்காட்சி மலரை திருப்பூர் கே.சுப்பராயன் எம்.பி. வெளியிட அதை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டிடப்பொறியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் ராஜேஷ் பெற்றுக்கொண்டார். திருப்பூர் சிவில் என்ஜினீயர்ஸ் அசோசியேசன் கைபேசி செயலியை திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் தொடங்கி வைத்தார். துணை மேயர் எம்.கே.எம்.பாலசுப்பிரமணியம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டிடப் பொறியாளர்கள் சங்க மாநில துணைத் தலைவர் விஜயாபானு ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக செய்தித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்து பேசும்போது ". நவீன காலத்திற்கு ஏற்ப, கட்டுமானப்பொருட்கள் ஆங்காங்கே தயாரிக்கப்பட்டு வருகிறது. கட்டிட தொழில் சிறு, குறு தொழிலாக நடைபெற்று வருகிறது. அது சிறிது, சிறிதாக நசிந்து வருகிறது. மற்றத் தொழில்களை ஒப்பிடுகையில் கட்டுமானத்தொழில் நிமிர்ந்து நிற்கிறது. ஏன் என்று சொன்னால் ஒவ்வொரு மனிதனுக்கும் வீடு தேவை. அதனால் எந்த வகையிலும் யாராலும் மக்களிடமிருந்து கட்டுமான தொழிலை பிரிக்க முடியாது. என்றார்.முடிவில் கண்காட்சி செயலாளர் ராஜசேகரன் நன்றி கூறினார்.
இந்த கண்காட்சியில் தமிழகம் மற்றும் இ்ந்தியாவில் உள்ள கட்டிட கட்டுமான பொருட்கள் தயாரிப்பிலும், விற்பனையிலும் சிறந்து விளங்கும் 200 நிறுவனங்களின் அரங்குகள் இடம் பெற்றுள்ளன. இந்த கண்காட்சி வருகிற 17-ந்தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது. தினமும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.