கத்தியால் குத்தி, தலையில் கல்ைலப்போட்டு ஆட்டோ டிரைவர் கொடூர கொலை
மதுரையில் கத்தியால் குத்தி, தலையில் கல்லைப்போட்டு ஆட்டோ டிரைவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
மதுரையில் கத்தியால் குத்தி, தலையில் கல்லைப்போட்டு ஆட்டோ டிரைவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது நண்பர்கள் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஆட்டோ டிரைவர் கொலை
மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள நாராயணபுரம் நாகம்மாள் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகன் மணி என்ற வெள்ளை மணி (வயது 24). ஆட்டோ டிரைவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்த நிலையில் நேற்று அதிகாலை செல்லூர் வைகை ஆற்றின் வடகரை பகுதியில் மணி வயிற்றில் கத்திக்குத்து காயங்களுடன், தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டும் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனே செல்லூர் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் கொலை செய்யப்பட்டு கிடந்த மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
நண்பர்கள் 3 பேருக்கு வலைவீச்சு
பின்னர் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் நேற்று முன்தினம் இரவு மணி, அவருடைய நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து வைகை வடகரை அருள்தாஸ்புரம் பகுதியில் மது அருந்தி உள்ளது தெரிய வந்தது. அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததுள்ளது.
இறந்த மணி மீது வாலிபர் ஒருவரை கொலை செய்ததாக டி.கல்லுப்பட்டி போலீஸ் நிலையத்தில் வழக்கும், செல்லூர் மற்றும் திலகர் திடல் போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. எனவே இந்த வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபர்கள் பழிக்குப்பழி தீர்க்கும் வகையில் மணியை கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே மணியுடன் மது அருந்திய நண்பர்கள் 3 பேரை காணவில்லை. இதனால் போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.