'தம்பியின் நோக்கம் நிறைவேறவில்லையே!'

Update: 2023-04-13 19:30 GMT

மேச்சேரி:-

துப்பாக்கி சூட்டில் பலியான நங்கவள்ளி ராணுவ வீரரின் அண்ணன் கண்ணீர் மல்க நிருபர்களிடம் கூறுகையில், தம்பியின் நோக்கம் நிறைவேறவில்லையே என்று கூறினார்.

ராணுவ வீரர்

சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே மசக்காளியூர் பனங்காட்டை சேர்ந்த நெசவு தொழிலாளி ரவி. இவருடைய மனைவி செல்வமணி. இந்த தம்பதிக்கு சந்தோஷ், கமலேஷ் என்ற 2 மகன்கள் இருந்தனர். மூத்த மகன் சந்தோஷ் சென்னையில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். 2-வது மகன் கமலேஷ் (வயது 24). பி.ஏ. பொருளாதாரம் படித்து விட்டு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ராணுவத்தில் பணியில் சேர்ந்தார்.

அவர், பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் தங்கி பணியில் ஈடுபட்டு இருந்தார். நேற்று முன்தினம் ராணுவ முகாமில் நடந்த துப்பாக்கி சூட்டில் கமலேஷ் பரிதாபமாக இறந்தார்.

குடும்பத்தினர் கதறல்

இந்த தகவல் அறிந்தவுடன் கமலேஷ் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கமலேஷ் இறப்பு செய்தி கேட்டு கதறி அழுதது கண்கலங்க செய்தது. இதற்கிடையே கமலேஷ் அண்ணன் சந்தோஷ் சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பினார்.

அவர், தன்னுடைய தம்பியின் நினைவுகள் குறித்து கண்ணீர் மல்க கூறியதாவது:-

நானும், என்னுடைய தம்பியும் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர்கள். எங்களது பெற்றோர் மிகவும் கஷ்டப்பட்டுதான் எங்களை படிக்க வைத்தனர். நான் பி.இ. முடித்து விட்டு சென்னையில் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்து விட்டேன். தம்பி கமலேஷ் பள்ளியில் படிக்கும் போதே இந்திய ராணுவத்தில் சேர வேண்டும். நாட்டுக்காக எல்லையை காக்க வேண்டும் என்று கூறி வந்தேன். அவனது நோக்கமும் அதுவாகத்தான் இருந்தது. எங்கள் ஊரில் எல்லோரும் கமலேசை போலீஸ் வேலைக்கு செல்லும்படி கூறினர். அப்படி இருந்தும் நாட்டுக்காக இந்திய ராணுவத்துக்கு செல்வேன் என்று கூறி வந்தான். அதன்படியே பி.ஏ. பொருளாதாரம் முடித்து விட்டு இந்திய ராணுவத்தில் கடந்த 2019-ம் ஆண்டு பணியில் சேர்ந்தான். கடந்த 1½ மாதத்துக்கு முன்புதான் விடுமுறையில் ஊருக்கு வந்து விட்டு சென்றான். நான் சென்னையில் இருந்து தம்பியை வழிஅனுப்பி வைத்தேன். இன்று எங்களை விட்டு தம்பி சென்று விட்டான். தம்பியின் இறப்பு குறித்து மத்திய, மாநில அரசுகள் தகவல் தெரிவிக்கவில்லை.

இவ்வாறு சந்தோஷ் அழுதபடி கூறினார். அப்போது அவர் கதறி அழுதது அங்கிருந்தவர்களின் கண்களில் இருந்தும் கண்ணீரை வர செய்தது.

உடல் அடக்கம் செய்ய ஏற்பாடு

இதற்கிடையே கமலேஷ் உடல் அடக்கம் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளை செய்ய தொடங்கியது. அதன்படி வருவாய்த்துறையினர் பனங்காடு கிராமத்துக்கு சென்று, கமலேஷ் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். கமலேஷ் உடல் அடக்கம் செய்வதற்காக மசக்காளியூர் சுடுகாட்டுக்கு சென்று இடத்தை வருவாய்த்துறையினர் பார்வையிட்டனர்.

இருந்தாலும் கமலேஷ் உடல் எப்போது சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது என்ற விவரம் எதுவும் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து இதுவரை எங்களுக்கு தகவல் வரவில்லை என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்