78 சென்ட் நிலம்
சென்னை ஆட்டந்தாங்கள் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 54). தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது தந்தை நடராஜன் பெயரில் பொன்னேரி அடுத்த பாடியநல்லூர் பகுதியில் 78 சென்ட் நிலம் இருந்தது. தந்தை நடராஜன் இறந்த பிறகு அந்த நிலத்தை வெங்கடேசன் தனது பெயருக்கு மாற்றினார்.
இந்நிலையில் கடந்த மாதம் தன்னுடைய இடத்தை பார்ப்பதற்காக அவர் பாடியநல்லூருக்கு வந்தார். அப்போது அந்த இடம் வீட்டு மனைகளுக்காக பிரிக்கபட்டும், அதில் சிலர் வீடு கட்டுவதற்காக இடத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். இதைகண்டு அதிர்ந்து போன வெங்கடேசன் இடத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தவர்களிடம் இது என்னுடைய இடம் என கூறினார்.அவர்கள் நாங்கள் இந்த இடங்களை விலைக்கு வாங்கி விட்டோம் என்று கூறியுள்ளனர். இதையடுத்து வெங்கடேசன் செங்குன்றம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் வில்லங்கம் சான்று போட்டு பார்த்தார்.
போலி ஆவணம் மூலம் விற்பனை
அப்பொழுது அவரது இடத்தை சென்னை திரு.வி.க நகர், பலராமன் தெருவை சேர்ந்த ராமைய்யா (73) என்ற நில தரகர்அவரது நண்பரான ரகுபதி என்பவரை நடராஜனின் வாரிசாக குறிப்பிட்டு போலி ஆவணம் தயாரித்து அந்த இடத்தை மனைகளாக பிரித்து சுமார் 13 பேருக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. அந்த இடத்தை வாங்கிய சிலர் வேறொரு நபர்களுக்கும் அதை விற்பனை செய்திருப்பதும் தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த வெங்கடேசன் இதுகுறித்து ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் வழக்குப்பதிவு செய்து ராமைய்யாவை நேற்று கைது செய்தார். பின்னர் பூந்தமல்லி கோர்ட்டில் போலீசார் அவரை ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சிலரை போலீசார் தேடி வருகின்றனர். மோசடி செய்யப்பட்ட இடத்தின் மதிப்பு ரூ.3 கோடி என்று கூறப்படுகிறது.