குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
கோபால்பட்டி அருகே குழாய் உடைந்து குடிநீர் வீணாகி செல்கிறது.
திண்டுக்கல்லில் இருந்து நத்தம் பகுதிக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குழாய்கள் பதிக்கப்பட்டு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த திட்டத்தில் நத்தம் பேரூராட்சிக்கும், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 200-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த குழாய்களில் அவ்வப்போது ஆங்காங்கே உடைப்பு ஏற்படுவதும் பின்னர் அதனை சரி செய்வதை வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் கோபால்பட்டியை அடுத்த தி.வடுகபட்டி பிரிவில் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதில் இருந்து குடிநீர் வீணாக வெளியேறி சாலையோரத்தில் குளம்போல் தேங்கி நிற்கிறது. இந்த உடைப்பு ஏற்பட்டு பல நாட்களாகியும் அதனை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சரி செய்யவில்லை என்று அப்பகுதி மக்கள் புகார் கூறி வருகின்றனர். சாலையோரம் தண்ணீர் தேங்கி நிற்பதால் இரவு நேரங்களில் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் கோடைகாலத்தில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை ஏற்படும் நேரத்தில் இப்படி குடிநீர் வீணாவதை தடுக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.