நாகை அரசு கல்லூரி கட்டிடத்தின் மேல் உடைந்து கிடக்கும் கண்ணாடிகள்
கஜா புயலின் போது சேதமடைந்து நாகை அரசு கல்லூரி கட்டிடத்தின் மேல் உடைந்து கிடக்கும் கண்ணாடியால் மாணவ- மாணவிகள், பேராசிரியர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கஜா புயலின் போது சேதமடைந்து நாகை அரசு கல்லூரி கட்டிடத்தின் மேல் உடைந்து கிடக்கும் கண்ணாடியால் மாணவ- மாணவிகள், பேராசிரியர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கஜா புயலில் உடைந்த கண்ணாடி
நாகையில் அரசு கலை அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு 1000-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். 50-க்கும் அதிகமான பேராசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த 2018-ம் ஆண்டு வீசிய கஜா புயலின் போது இந்த கல்லூரியின் கட்டிடங்கள் கடுமையாக சேதம் அடைந்தன. கட்டிடத்தின் முதல் மாடி வெளிப்புற கண்ணாடிகள் உடைந்து நுழைவு வாயிலில் கார் நிறுத்தும் போர்டிகோ மீது விழுந்து கிடக்கிறது.
உயிர்பலி ஏற்படும் அபாயம்
கூர்மையான கண்ணாடிகள் எப்போது வேண்டுமானாலும் கீழேவிழுந்து விபத்து ஏற்படும் ஆபத்தான நிலையில் தொங்கிக்கொண்டு இருக்கிறது. காற்று பலமாக வீசும் பொழுது கண்ணாடி துண்டுகள் மாணவ- மாணவிகள் மீது விழுந்து உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனால் கல்லூரிக்கு மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள் அச்சத்துடனேயே சென்று வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.இது குறித்து மாணவ-மாணவிகள் கூறியதாவது:-
அச்சுத்துடன் சென்று வருகிறோம்
கஜா புயலின் போது கல்லூரி கட்டிடத்தின் கண்ணாடி உடைந்து கார் நிறுத்தும் போர்டிகோ மீது விழுந்து கிடக்கிறது. பாதுகாப்பு கருதி உடைந்த கண்ணாடிகளை அப்புறப்படுத்தி, சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து 4 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அதனை அகற்றவில்லை.
நாகையில் அடிக்கடி புயல் வீசி வருகிறது. இந்த நிலையில் பலமாக காற்று வீசும்போது கல்லூரி நுழைவாயில் அருகே வருவதற்கு பயமாக உள்ளது. காற்றில் கண்ணாடி துண்டுகள் மேலே விழுந்து விடும் என்ற அச்சத்துடன் ஒவ்வொரு நாளும் கல்லூரிக்குள் நுழைய வேண்டியுள்ளது.
அப்புறப்படுத்த வேண்டும்
தற்போது மாண்டஸ் புயலால் இந்த கண்ணாடி கீழே விழும் என நினைத்திருந்தோம். ஆனால் எதிர்பார்த்த அளவு காற்று வீசாததால் கண்ணாடி கீழே விழவில்லை. எனவே ஏதேனும் உயிர் பலி ஏற்படும் முன்பு கல்லூரி கட்டிடத்தில் மேல் கிடக்கும் உடைந்த கண்ணாடிகளை அப்புறப்படுத்த வேண்டும். கட்டிடத்தில் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும் என்றனர்.