வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
குடியாத்தம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சென்றாம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் தூர்வாசலு. இவரது மனைவி ருசேந்திரமணி (வயது 67). இவரது பிள்ளைகள் சென்னையில் வசித்து வருகின்றனர். கடந்த 14-ந் தேதி சென்னையில் உள்ள மகன் வீட்டிற்கு ருசேந்திரமணி சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று காலையில் ருசேந்திரமணியின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக இதுகுறித்து ருசேந்திரமணிக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து ருசேந்திரமணி வந்து பார்த்தபோது வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 4 பவுன் வளையல்கள், பணம் ரூ.10 ஆயிரம் உள்ளிட்டவை திருட்டு போயிருப்பது தெரியவந்தது.
இந்த திருட்டு சம்பவம் குறித்து குடியாத்தம் டவுன் போலீசில் அளித்த புகாரின் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்ளிட்ட போலீசார் திருட்டு நடைபெற்ற வீட்டில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த கை ரேகைகளை பதிவு செய்தனர்.
மேலும் இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.