இரணியல் அருகே வீட்டின் கதவை உடைத்து 4 பவுன் நகை திருட்டு
இரணியல் அருகே வீட்டின் கதவை உடைத்து 4 பவுன் நகை திருடப்பட்டு உள்ளது.
திங்கள்சந்தை:
இரணியல் போலீஸ் சரகம் பரசேரி கிருஷ்ணா தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 65). இவருடைய மனைவி ஜலஜா (58). அய்யப்பன் உடல் நலம் பாதிக்கப்பட்டு சுங்கான்கடை அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் ஜலஜா வீட்டை பூட்டிவிட்டு ஆஸ்பத்திரியில் தங்கி இருந்து கணவரை கவனித்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் ஜலஜா ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.
படுக்கை அறையில் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 4 பவுன் தங்க காப்பு, மோதிரம் போன்ற நகைகள், இரண்டு பாஸ்போர்ட் போன்றவற்றை காணவில்லை. வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட யாரோ மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகையை திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து வீட்டில் திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்.
---