திருவாரூரில், கோழிக்கறி விலை கிடுகிடு உயர்வு

கோடை விடுமுறை எதிரொலியாக திருவாரூரில், கோழிக்கறி விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது.

Update: 2023-05-17 19:15 GMT

கோடை விடுமுறை எதிரொலியாக திருவாரூரில், கோழிக்கறி விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது.

அசைவ பிரியர்கள்

சைவ உணவுகளை விட அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வீட்டில் சமைத்தாலும் விதவிதமான அசைவ உணவுகளை ஓட்டல்களில் இருந்து அன்றாடம் வீட்டிற்கே வரவழைத்து உண்ணும் அளவுக்கு அசைவ பிரியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஓய்வு நேரத்தில், விடுமுறை நாளில் மட்டுமே அசைவம் சாப்பிட்ட நிலை இப்போது மாறிவிட்டது. முன்பெல்லாம் அசைவ உணவுகளுக்காகவே நாட்டுக்கோழிகளை வீட்டில் வளர்த்தவர்களும் உண்டு. பிராய்லர் கோழிகள் என்பதெல்லாம் மருந்துக்கும் கூட அப்போது கிடையாது.

பிராய்லர் கோழி இறைச்சி

கிராமத்து வீடுகளிலும், வயல்வெளிகளிலும் ஆங்காங்கே சிதறி கிடக்கும் சிறுதானியங்களை தின்றுவிட்டு உற்சாகமாக அங்குமிங்கும் திரியும் நாட்டுக்கோழிகளின் இறைச்சிக்கு சுவை அதிகம். ஆனாலும் விலையை கருத்தில் கொண்டு பெரும்பாலானோர் பிராய்லர் கோழி இறைச்சியை வாங்குகிறார்கள்.

பொதுவாக விடுமுறை காலங்களில் இறைச்சி விற்பனை அதிகரிப்பது வழக்கம். ஆட்டிறைச்சியின் விலை அதிகமாக உள்ளதால் கோழி இறைச்சியின் பயன்பாடே தற்போது மிகவும் அதிகமாக உள்ளது. சமைப்பது எளிது, சுவை போன்ற காரணங்களால் கோழி இறைச்சி வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது.

கோடை விடுமுறை

தற்போது கோடை விடுமுறை என்பதால் பிராய்லர் கோழி இறைச்சியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் விலையும் அதிகரித்து வருகிறது.

திருவாரூர் நேதாஜி சாலை, துர்காலயா சாலை, விளமல் உள்ளிட்ட பல பகுதிகளில் கோழி இறைச்சி கடைகள் உள்ளன. இந்த பகுதியில் கோடை விடுமுறை என்பதாலும், உறவினர்கள் வருகையாலும் மக்கள் கோழி இறைச்சியை விரும்பி வாங்கி வருகிறார்கள்.

விலை உயர்வு

கடந்த வாரம் வரை 1 கிலோ பிராய்லர் கோழி இறைச்சியின் விலை ரூ.180 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் நேற்று விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்பட்டது.

உயிர் கோழி ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது. நாட்டுக்கோழியின் விலை அதிகமாக இருப்பதால் பிராய்லர் கோழி இறைச்சியை மக்கள் விரும்பி வாங்கி வந்த நிலையில் தற்போது அதன் விலையும் அதிகரித்து வருகிறது.

தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் சாதாரண மக்கள் தங்களுடைய அசைவ உணவு தேவையை பிராய்லர் கோழிக்கறி மூலமாக ஈடு செய்கின்றனர். இந்த நேரத்தில் கோழி இறைச்சி விலை உயர்ந்துள்ளது குடும்ப செலவை அதிகரிக்க வைத்துள்ளதாக மக்கள் கவலை தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்