பொய்கை கால்நடை சந்தையில் விறுவிறுப்பான விற்பனை ரூ.3 கோடிக்கு வர்த்தகம்

பொய்கை கால்நடை சந்தையில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. ரூ.3 கோடி வரை விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Update: 2022-08-16 18:40 GMT

அணைக்கட்டு

பொய்கை கால்நடை சந்தையில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. ரூ.3 கோடி வரை விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

மாட்டுச்சந்தை

அணைக்கட்டு ஒன்றியத்தில் மிகப்பெரிய அளவில் வர்த்தகம் ஈட்டித்தருவது பொய்கையில் உள்ள மாட்டுசந்தையாகும். இந்த சந்தை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெற்று வருகிறது.

இந்த சந்தையில் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களிலிருந்தும் ஏராளமான கறவை மாடுகள், காளைகள், ஆடுகள், கோழிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இதனை வாங்குவதற்கும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் குவிந்து வருகின்றனர்.

இதனால் இங்கு சாதாரணமாக வாரத்திற்கு ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை கால்நடைகள் விற்பனை மட்டுமின்றி சார்பு பொருட்களான கால்நடை தீவனங்கள், கயிறு ஆகியவையும் விற்பனையாகும். மேலும் காய்கறிகள் விற்பனையும் அதிக அளவில் நடைபெறுகிறது.

விறுவிறுப்பான விற்பனை

இந்த நிலையில் நேற்று காலை தொடங்கிய மாட்டுச்சந்தையில் கடந்த வாரத்தை காட்டிலும் அதிக அளவிலான கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதனால் பெரும்பாலான வியாபாரிகள், விவசாயிகள் கால்நடைகளை வாங்க ஆர்வம் காட்டியதால் விற்பனை விறுவிறுப்பாக இருந்தது,

இதுகுறித்து பொய்கை சந்தை நடத்தும் ஏலதாரர்களில் ஒருவரான பி.வெங்கடேசனிடம் கேட்டதற்கு இந்த வாரம் கால்நடைகளின் வரத்து அதிகமாகவே இருந்தது. சந்தையில் வியாபாரம் செய்வோர், வாகன கட்டணம் என வாரத்திற்கு ஒரு லட்சம் முதல் ரூ. 1.30 லட்சம் வரை வசூல் ஆகும். நேற்று ரூ.2 லட்சம் வரை சுங்க வரி வசூல் ஆனது. இதனால் வர்த்தகம் ரூ.3 கோடிக்கு இருக்கலாம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்