வாக்குச்சாவடி மையங்களை மறுசீரமைத்தல் குறித்து அரசியல் கட்சி பிரமுகர்களுடன் விளக்க கூட்டம்

மாவட்டத்தில் சிறப்பு சுருக்க திருத்த முறையின்போது, வாக்குச்சாவடி மையங்களை மறுசீரமைத்தல் குறித்து அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடன் விளக்க கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-08-25 19:08 GMT

விளக்க கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சிறப்பு சுருக்க திருத்த முறையின்போது, வாக்குச்சாவடி மையங்களை மறுசீரமைத்தல் குறித்து அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடனான விளக்கக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்.

கடந்த ஜனவரி மாதம் 5-ந் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 லட்சத்து 62 ஆயிரத்து 655 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 79 ஆயிரத்து 306 பெண் வாக்காளர்களும், 66 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 13 லட்சத்து 42 ஆயிரத்து 27 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

வாக்குச்சாவடி அமைவிடங்கள்

மாவட்டத்தில் 1,559 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. மேலும், 941 வாக்குச்சாவடி அமைவிடங்கள் உள்ளன. இதில் நகர எல்லைக்குள் 85 வாக்குச்சாவடி அமைவிடங்கள் மற்றும் கிராம எல்லைக்குள் 856 வாக்குச்சாவடி அமைவிடங்கள் உள்ளன. மாவட்டத்தில் 2024-ம் ஆண்டிற்கான சிறப்பு சுருக்க திருத்த முறையில் புதுக்கோட்டை, அறந்தாங்கி, இலுப்பூர் வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் ஆர்.டி.ஓ.க்கள் தலைமையில் 178-கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி, 179-விராலிமலை சட்டமன்ற தொகுதி, 180-புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி, 181-திருமயம் சட்டமன்ற தொகுதி, 182-ஆலங்குடி சட்டமன்ற தொகுதி மற்றும் 183-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் மறுசீரமைப்பு தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி கூட்டம் கடந்த 22 மற்றும் 23-ந் தேதிகளில் நடத்தப்பட்டது.

வாக்குச்சாவடி மையங்களில் நகரம் மற்றும் கிராம எல்லைகளில் 1,500 வாக்காளர்களுக்கு மேல் இருந்தால் வாக்குச்சாவடி மையங்களை பிரித்தல் வேண்டும். இதில் புதுக்கோட்டை மாவட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களால் 1500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடி மையங்கள் ஏதுமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுசீரமைப்பு

வாக்காளர் குடியிருப்பு பகுதியிலிருந்து 2 கிலோ மீட்டருக்குள் வாக்குச்சாவடி மையங்கள் அமைத்தல் வேண்டும். இதில் புதுக்கோட்டை மாவட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களால் 2 கிலோ மீட்டருக்கு அப்பால் வாக்குச்சாவடி மையங்கள் ஏதுமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி மையங்கள் தார்சு கட்டிடத்தில் தரை தளத்தில் அமைத்திட வேண்டும். அந்த கிராமத்தில் தார்சு கட்டிடம் இல்லாத நிலையில் ஓட்டுக்கட்டிடத்தில் வாக்குச்சாவடி மையம் அமைக்கலாம். வாக்குச்சாவடி மையங்கள் அரசு கட்டிடத்தில் அமைக்க வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்கள் மறுசீரமைப்பு தொடர்பாக கட்டிடம் மாற்றம் 77, இடம் மாற்றம் 5 என மொத்தம் 82-ம், வாக்குச்சாவடி பிரிவு மாற்றம் 2-ம், வாக்குச்சாவடி பெயர் மாற்றம் 39-ம் ஆக மொத்தம் 123 மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, வாக்காளர் பதிவு அலுவலர்கள் குழந்தைசாமி (இலுப்பூர்), ஜஸ்டின் ஜெபராஜ் (அறந்தாங்கி), ரெத்தினம் (தி.மு.க.), முகமது சேட் (அ.தி.மு.க.), இப்ராஹிம் பாபு (காங்கிரஸ்) மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்