சத்தி பவானி ஆற்றின் குறுக்கே ரூ.11¾ கோடியில் புதிய பாலம் கட்டும் பணி தீவிரம்
சத்தியமங்கலம் பவானி ஆற்றின் குறுக்கே ரூ.11¾ கோடியில் புதிய பாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் பவானி ஆற்றின் குறுக்கே ரூ.11¾ கோடியில் புதிய பாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
புதிய பாலம்
சத்தியமங்கலம் நகரின் மத்தியில் பவானி ஆறு ஓடுகிறது. இதன் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான பாலம் இருந்தது. இதன் ஒரு பகுதி சத்தியமங்கலம் என்றும், மற்றொரு பகுதி ரங்கசமுத்திரம் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த பாலம் வழியாக தமிழ்நாடு-கர்நாடகா இரு மாநிலங்களையும் இணைக்கும் திண்டுக்கல்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.
மக்கள் தொகை பெருக்கம் காரணமாக பழைய பாலத்தில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 1987-ம் ஆண்டு பழைய பாலம் அருகிலேயே புதிய பாலம் கட்டப்பட்டது.
ரூ.11¾ கோடி
அதைத்தொடர்ந்து புதிய பாலம் வழியாக வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. பழைய பாலம் வழியாக இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மட்டுமே சென்று வருகிறார்கள்.
மேலும் தேசிய நெடுஞ்சாலை என்பதால் புதிய பாலத்தில் வாகன போக்குவரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அந்த பாலத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே பழைய பாலத்தை முற்றிலும் இடித்துவிட்டு புதிதாக பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.11 கோடியே 77 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பணிகள் தீவிரம்
இதைத்தொடர்ந்து பழைய பாலம் இடித்து அகற்றப்பட்டது. இதையடுத்து கடந்த 3 மாதங்கள் முன்பு டெண்டர் விடப்பட்டு பவானி ஆற்றின் குறுக்கே பழைய பாலத்துக்கு பதிலாக புதிய பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.
ராட்சத கான்கிரீட் தூண்கள் அமைக்கும் பணியும் நடக்கிறது. ஆற்றின் குறுக்கே 6 தூண்கள் அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகள் தற்போது விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.