கோபி அருகே ஓடையின் குறுக்கே தற்காலிக பாலம் அமைத்து இறந்தவரின் உடலை சுமந்து சென்ற உறவினர்கள்- நிரந்தர பாலம் கட்ட கோரிக்கை

கோபி அருகே ஓடையின் குறுக்கே தற்காலிக பாலம் அமைத்து இறந்தவரின் உடலை உறவினர்கள் சுமந்து சென்றனர். எனவே விரைந்து நிரந்தர பாலம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-02-02 20:59 GMT

கடத்தூர்

கோபி அருகே ஓடையின் குறுக்கே தற்காலிக பாலம் அமைத்து இறந்தவரின் உடலை உறவினர்கள் சுமந்து சென்றனர். எனவே விரைந்து நிரந்தர பாலம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இறந்தவர்களின் உடலை புதைக்க...

கோபி அருகே உள்ள சாணார்பதி பகுதியில் சுமார் 120-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் இறந்தவர்களை கீரிப்பள்ளம் ஓடையின் அக்கரையில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்வார்கள்.

இந்த நிலையில் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு கழிவு நீர் செல்லும் கீரிப்பள்ளம் ஓடையின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலம் பழுதடைந்து இருந்தது. இதனால் அந்த இடத்தில் பாலம் இடித்து அகற்றப்பட்டது.

ஆனால் மீண்டும் ஓடையின் குறுக்கே பாலம் கட்டப்படவில்லை. இதனால் சாணார்பதியில் யாராவது இறந்தால் ஓடையின் குறுக்கே அவரது உடலை சுமந்து செல்ல தற்காலிக பாலம் அமைக்க பொதுமக்கள் முடிவு செய்தனர்.

இந்த நிலையில் சாணார்பதியை சேர்ந்த பாவுகுட்டி என்கிற பாவாயாள் (வயது 82) வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் இரவு இறந்தார். இதைத்தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நிதி வசூல் செய்து நேற்று ஒரே நாளில் ஓடையின் குறுக்கே தற்காலிக பாலம் அமைத்தனர். இதைத்தொடர்ந்து பாவாயாள் உடலை உறவினர்கள் பாடை கட்டி தற்காலிக பாலம் வழியாக சுமந்து சென்றனர். பின்னர் அக்கரையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

தற்காலிக பாலம்

இதுகுறித்து அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

கோபி பகுதியில் இருந்து வரும் கழிவுநீருடன் சேறும் சகதியுமாக கீரிப்பள்ளம் ஓடையில் தண்ணீர் செல்கிறது. மேலும் பிளாஸ்டிக் பாட்டில்களும் மிதந்து வருவதால் தண்ணீர் தங்கு தடையின்றி செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. பாலம் கட்ட 3 முறைக்கும் மேல் பூமிபூஜை செய்துவிட்டு பணிகளை இன்று வரை தொடங்கவில்லை. இதனால் ஒவ்வொரு முறையும் அப்பகுதியில் யாராவது இறந்துவிட்டால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். எனவே விரைந்து ஓடையின் குறுக்கே பாலம் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்