திருமணமான 10 நாளில் புதுப்பெண் தற்கொலை
ரெட்டியார்சத்திரத்தில், திருமணமான 10 நாளில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.
தூக்கில் தொங்கிய புதுப்பெண்
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் மாணிக்கவாசகபுரத்தை சேர்ந்தவர் மருதமுத்து (வயது 28). இவர், ரெட்டியார்சத்திரத்தில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். பால் வியாபாரமும் செய்கிறார். அவருடைய மனைவி தர்ஷினி (21). எரியோட்டை சேர்ந்த இவருக்கும், மருதமுத்துவுக்கும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்தநிலையில் தினமும் அதிகாலையில் எழுந்து, மருதமுத்து பால் கறக்க செல்வது வழக்கம். அதன்படி அவர் நேற்று பால் கறக்க சென்றார். பின்னர் காலை 6 மணிக்கு வீடு திரும்பினார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, தூக்கில் தர்ஷினி பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மருதமுத்து அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.
ஆர்.டி.ஓ. விசாரணை
இதுகுறித்து ரெட்டியார்சத்திரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் தர்ஷினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தர்ஷினி தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
தற்கொலை செய்து கொண்ட தர்ஷினிக்கு திருமணமாகி 10 நாட்களே ஆவதால், சாவுக்கான காரணம் குறித்து திண்டுக்கல் ஆர்.டி.ஓ. பிரேம்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.