வாகனம் மோதி கொத்தனார் பலி
சிவகிரி அருகே வாகனம் மோதி கொத்தனார் பலியானார்.
சிவகிரி:
சிவகிரி அருகே ராமநாதபுரம் பஞ்சாயத்து மேட்டுபட்டி மேல தெருவைச் சேர்ந்தவர் தங்கமாரி மகன் விஜய் (வயது 22). கொத்தனாரான இவர் நேற்று முன்தினம் இரவில் சிவகிரியில் இருந்து மேட்டுப்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
சிவகிரிக்கு தெற்கே வெற்றிலை மண்டபம் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் திடீரென்று மோட்டார் சைக்கிளின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே விஜய் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய வாகன டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.