லாரி மோதி கொத்தனார் பலி
புவனகிரி அருகே லாரி மோதி கொத்தனார் இறந்தார். இந்த விபத்துக்கு காரணமான டிரைவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புவனகிரி,
புவனகிரி அருகே தெற்குதிட்டை கிராமத்தை சேர்ந்தவர் கலைச்செல்வன் (வயது 40) கொத்தனார். இவர் இயற்கை உபாதையை கழிக்க அதே பகுதியில் உள்ள குறிஞ்சிப்பாடி மெயின் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சாலை விரிவாக்க பணிக்காக மணல் ஏற்றி வந்த லாரி கலைச்செல்வன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
போராட்டம்
இந்த நிலையில் கலைச்செல்வனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த வழியாக சாலை விரிவாக்க பணிக்காக மணல் ஏற்றி வந்த 5 லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை உடனே கைது செய்ய வேண்டும் என கோரி அவர்கள் கோஷங்களை எழுப்பினர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.