சூரமங்கலம்:-
சேலம் புதுரோட்டில் செங்கல் சூளை தொழிலாளர்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சாலைமறியல்
சேலம் புதுரோட்டை அடுத்த மல்லமூப்பம்பட்டி பகுதியில் செங்கல் சூளைகள் உள்ளன. இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கூலி வேலை செய்து வருகின்றன. நேற்று மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள், செங்கல் சூளைகளில் மின்சாரத்தை துண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் நேற்று மாலை சுமார் 7 மணி அளவில் சேலம் புதுரோடு பகுதியில் திரண்டனர். அங்கு சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தீக்குளிக்க முயற்சி
தகவல் அறிந்த சேலம் மேற்கு சரக போலீஸ் உதவி கமிஷனர் நிலவழகன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் (குற்ற பிரிவு) கந்தவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது செங்கல் சூளை தொழிலாளி பூவரசன் என்பவர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். சாலை மறியலால் புதுரோடு பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.