செங்கல்சூளை தொழிலாளர்கள் கஞ்சி காய்ச்சி போராட்டம்
குமரி மாவட்டத்தில் மண் எடுக்க அனுமதி கேட்டு செங்கல்சூளை தொழிலாளர்கள் கஞ்சி காய்ச்சி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போராட்டத்தில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.வும் பங்கேற்றார்.
ஆரல்வாய்மொழி:
குமரி மாவட்டத்தில் மண் எடுக்க அனுமதி கேட்டு செங்கல்சூளை தொழிலாளர்கள் கஞ்சி காய்ச்சி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போராட்டத்தில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.வும் பங்கேற்றார்.
மண் எடுக்க அனுமதி மறுப்பு
குமரி மாவட்டத்தில் செங்கல்சூளை தொழில் ஒரு பிரதான தொழிலாக உள்ளது. ஆரல்வாய்மொழி, தோவாளை, செண்பகராமன்புதூர் பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட செங்கல்சூளைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான உள்ளூர், வெளியூர் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே செங்கல்சூளைக்கு முக்கிய தேவையான மண் எடுப்பதற்கு குமரி மாவட்டத்தில் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் சூளை நடத்துபவர்கள் அண்டை மாவட்டத்தில் அதிக விலை கொடுத்து மண் விலைக்கு வாங்கி தொழிலை நடத்தி வந்தனர். சிலர் சூளைகளை மூடி விட்டனர்.
வாழ்வாதாரம் இழந்து தவிப்பு
இதையடுத்து மண் எடுக்க அனுமதி கேட்டு தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. சட்டசபையில் பேசினார். ஆனாலும் மாவட்ட நிர்வாகம் மண் எடுக்க அனுமதி அளிக்கவில்லை.
இதனால் இந்த தொழிலை நம்பி இருக்கும் உள்ளூர் மற்றும் வெளியூர், வடமாநில தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறார்கள்.
கஞ்சி காய்ச்சி போராட்டம்
எனவே, தொழிலாளர்கள் தங்கள் நிலையை அரசுக்கு எடுத்து கூறும் விதமாக ஆரல்வாய்மொழியில் கஞ்சி காய்ச்சி போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு செங்கல்சூளை உற்பத்தியாளர்கள் சங்க தலைவரும், கவுன்சிலருமான ஜோசப் ரெத்தினராஜ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஏசுமணி, செயலாளர் ராபி, கணக்கர் வின்சென்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார், தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன், மாவட்ட கவுன்சிலர் வக்கில் பரமேஸ்வரன், அ.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கஞ்சி காய்ச்சி குடித்தனர்.
ஜி.எஸ்.டி. வரிக்கு...
போராட்டத்தில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பேசுகையில்,
குடிசை தொழிலான செங்கல் தொழிலுக்கு ஜி.எஸ்.டி. வரி வசூலிப்பது கண்டிக்கத்தக்கது. ஜி.எஸ்.டி.வரி போடும் அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இந்த போராட்டத்தால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.