விவசாய மின் இணைப்பு வழங்க லஞ்சம்
விவசாய மின் இணைப்பு வழங்க அதிகாரிகள் லஞ்சம் கேட்கின்றனர் என்று விழுப்புரத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மோகன் தலைமையில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் கலந்து கொண்டு பேசியதாவது:-
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களை தூர்வார கோரி கடந்த 10 மாதங்களாக மனு கொடுத்து வருகிறோம். அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் பதில் கூற வேண்டும்.
விவசாய மின் இணைப்பு வழங்க மின்வாரிய அதிகாரிகள் லஞ்சம் கேட்கின்றனர். உழவர் பாதுகாப்பு அட்டை இல்லாதவர்களுக்கு உடனடியாக உழவர் பாதுகாப்பு அட்டை வழங்க வேண்டும்.
இடிதாங்கிகள் அமைக்க வேண்டும்
ஒவ்வொரு கிராமத்திலும் மழைக்காலத்தின் போது விவசாயிகள் மற்றும் ஆடு, மாடுகளின் உயிர்களை காக்கும் வகையில் இடிதாங்கிகள் அமைக்க வேண்டும். பள்ளிநெழியனூரில் 6½ அகலம் இருந்த வாய்க்கால் தற்போது ஆக்கிரமிப்பால் 1½ அடியாக சுருங்கி உள்ளது. இதனால் மழைநீர் சீராக செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருவதால் விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதேபோல் வாய்க்கால் ஆக்கிரமிப்பால் சிறுவந்தாடு ஏரிக்கு தண்ணீர் வரவில்லை. எனவே ஆக்கிரமிப்பை அகற்றி வாய்க்காலை தூர்வார வேண்டும். பெரமண்டூர் கிராமத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அரசு நிலத்தை மீட்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர்.
நடவடிக்கை
அதற்கு கலெக்டர் மோகன் பதில் அளித்து கூறுகையில், அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் உழவர் பாதுகாப்பு அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், பள்ளி நெழியனூரில் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சிறுவந்தாடு ஏரிக்கு மழைநீரை கொண்டு செல்ல உடனடியாக பொதுப்பணி துறையினர் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். எல்லீஸ்சத்திரம் அணையை சீரமைக்க ரூ.25 கோடி நிதியை விரைவில் அரசு ஒதுக்கும் என எதிர்பார்க்கின்றேன். இவ்வாறு கலெக்டர் கூறினார்.