கட்டிட வரைபட அனுமதிக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம்; பஞ்சாயத்து தலைவர் கைது
கட்டிட வரைபட அனுமதிக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பஞ்சாயத்து தலைவர் கைது செய்யப்பட்டார்.
ராஜபாளையம்,
கட்டிட வரைபட அனுமதிக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பஞ்சாயத்து தலைவர் கைது செய்யப்பட்டார்.
கட்டிட வரைபட அனுமதி
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கீழராஜகுலராமன் பகுதியை சேர்ந்தவர் பொன் பாபா பாண்டியன். அதே பகுதியில் இவருடைய மனைவி ரூபா ராணி பெயரில் உள்ள காலி நிலம் உள்ளது. அதில் வீடு கட்டுவதற்காக வரைபட அனுமதி வேண்டி கீழராஜகுலராமன் பஞ்சாயத்து அலுவலகத்தில் பொன் பாபா பாண்டியன் மனு அளித்தார். வரைபட அனுமதிக்காக அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ.17,910-ஐ ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொன் பாபா பாண்டியன் செலுத்தி உள்ளார்.
ரூ.10 ஆயிரம் லஞ்சம்
இதற்கான ரசீதும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை வரைபட அனுமதி வழங்கப்படவில்லை. இதுகுறித்து பஞ்சாயத்து தலைவர் காளிமுத்துவிடம் (60), பொன் பாபா பாண்டியன் கேட்டபோது வரைபட அனுமதி வழங்க தனக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சமாக வழங்குமாறு கூறியுள்ளார்.
இதற்கு பொன் பாபா பாண்டியன் மறுப்பு ெதரிவித்ததாக கூறப்படுகிறது. உடனே ரூ.6 ஆயிரம் தர வேண்டும் என பஞ்சாயத்து தலைவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து பொன் பாபா பாண்டியன், விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதற்கிடையே நேற்று லஞ்ச பணத்தை தன்னிடம் கொண்டு வந்து கொடுக்குமாறு பஞ்சாயத்து தலைவர் காளிமுத்து கூறியுள்ளார்.
பஞ்சாயத்து தலைவர் கைது
லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின்பேரில், ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூபாய் நோட்டுக்களை பொன் பாபா பாண்டியன், பஞ்சாயத்து தலைவரிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், காளிமுத்துவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இதையடுத்து பஞ்சாயத்து அலுவலக வரவு, செலவு கணக்குகள் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.
கட்டிட வரைபட அனுமதி வழங்க லஞ்சம் வாங்கிய பஞ்சாயத்து தலைவர் கைது செய்யப்பட்ட நடவடிக்கை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.