ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது

திசையன்விளையில் பட்டா மாற்றம் செய்ய பெண்ணிடம் ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-06-24 18:41 GMT

திசையன்விளை:

திசையன்விளையில் பட்டா மாற்றம் செய்ய பெண்ணிடம் ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது செய்யப்பட்டார்.

நில அளவையர்

நெல்லை மாவட்டம் திசையன்விளை மணலிவிளை அரிகிருஷ்ண நாடார் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் வெளிநாட்டில் உள்ளார். இவருடைய மனைவி மகாலட்சுமி (வயது 32).

இவர் தங்களுக்கு சொந்தமான 4 சென்ட் இடத்துக்கு பட்டா மாற்றம் செய்து தரும்படி திசையன்விளை பிர்கா நில அளவையர் அன்பழகனிடம் (40) கேட்டார்.

ரூ.6 ஆயிரம்

அதற்கு அவர், பட்டா மாற்றம் செய்ய வேண்டுமானால் ரூ.6 ஆயிரம் தர வேண்டும் என்று கூறினார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத மகாலட்சுமி இதுகுறித்து நெல்லையில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார்.

உடனே லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மதியழகன், இன்ஸ்பெக்டர் ராபின் ஞானசிங், சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முகநயினார், சீதாராமன், இசக்கிபாண்டி ஆகியோர் தலைமையிலான போலீசார், ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகள் ரூ.6 ஆயிரத்தை மகாலட்சுமியிடம் கொடுத்து, அவற்றை நில அளவையர் அன்பழகனிடம் கொடுக்குமாறு கூறினர்.

கைது

அதன்படி, மகாலட்சுமி நேற்று திசையன்விளை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் வைத்து அன்பழகனிடம் அந்த ரூபாய் நோட்டுகளை கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அன்பழகனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்