வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு போனது.
மீன்சுருட்டி:
நகை-பணம் திருட்டு
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள வெண்ணங்குழி நடுத்தெருவை சேர்ந்தவர் தென்னரசு (வயது 65). இவருடைய மனைவி அமுதா(60). இவர்கள் தங்களது வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த 2 பீரோக்களை மர்ம நபர்கள் உடைத்து அவற்றில் இருந்த அரை பவுன் மோதிரம், 2 கிராம் தோடு மற்றும் ஆயிரம் ரூபாயை திருடிச்சென்றது தெரியவந்தது.
மற்றொரு வீட்டில்...
மேலும் அதே தெருவை சேர்ந்தவர் பாபு(39). இவர் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இதனால் ஊரில் உள்ள இவரது வீட்டை அருகில் உள்ள உறவினர்கள் பார்த்து வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து, உள்ளே சென்று அங்கிருந்த பீரோவை உடைத்து பார்த்துள்ளனர். பீரோவில் ஒன்றும் இல்லாததால், அவர்கள் திரும்பி சென்றுள்ளனர்.இந்த சம்பவங்கள் குறித்து தகவல் அறிந்த மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்(பயிற்சி) வீரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
போலீசார் விசாரணை
மேலும் மோப்ப நாய் மலர் வரவழைக்கப்பட்டு, துப்பு துலக்கப்பட்டது. திருட்டு நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி ஓடிய மோப்ப நாய் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது தூரம் சென்று மீண்டும் திரும்பி வந்தது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவங்கள் குறித்து மீன்சுருட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.