கண்டாச்சிபுரம் அருகே கோவில் உண்டியல் உடைப்பு மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு
கண்டாச்சிபுரம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
திருக்கோவிலூர்,
கண்டாச்சிபுரம் அருகே உள்ள வீரங்கிபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலுக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவில் புகுந்த மர்ம ஆசாமிகள் கோவில் வளாகத்தில் இருந்த உண்டியலை உடைத்து, அதில் இருந்த காணிக்கை பணத்தை திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா நாராயணசாமி கொடுத்த புகாரின்பேரில் கண்டாச்சிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்னுரங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியதுடன், உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளையும் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.