772 அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு திட்டம்

முத்துக்காளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை கலெக்டர் உமா தலைமையில் அமைச்சர் மதிவேந்தன், ராஜேஷ்குமார் எம்.பி. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Update: 2023-08-25 18:45 GMT

ராசிபுரம்

காலை உணவு திட்டம்

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அனைத்து வேலை நாட்களிலும் இலவச காலை உணவு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதற்கட்டமாக கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே 70 அரசு தொடக்கப்பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 5 ஆயிரத்து 505 மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். தற்போது இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டு நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 772 அரசு தொடக்கப் பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது வரை நாமக்கல் மாவட்டத்தில் 842 அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டு 41 ஆயிரத்து 60 மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர்.

அமைச்சர், எம்.பி. தொடங்கி வைத்தனர்

இந்த திட்டம் நேற்று ராசிபுரம் ஒன்றியம் முத்துகாளிப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தொடக்க விழா நடைபெற்றது. நாமக்கல் கலெக்டர் உமா தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி. ஆகியோர் தொடங்கி வைத்து 42 மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டனர். கேசரி, கோதுமை உப்புமா, சாம்பார் சட்னியுடன் வழங்கப்பட்டது. மாணவ மாணவிகளுக்கு டிபன் பாக்ஸ் வழங்கினர். தசை நோயால் பாதிக்கப்பட்ட மோகனூரைச் சேர்ந்த தங்கபாண்டியன் மகன் பரதன், தீபா ஆகியோர் வீடு கட்டுவதற்காக

ராஜேஷ்குமார் எம்.பி. அவரது சம்பளத்திலிருந்து ரூ.2 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் உமாவிடம் வழங்கினார்.

முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், வெண்ணந்தூர் வட்டாரத்தைச் சேர்ந்த 105 பள்ளிகளிலும், ராசிபுரம் நகராட்சி, வெண்ணந்தூர், புதுப்பட்டி, பிள்ளாநல்லூர், பட்டணம், அத்தனூர் ஆகிய பேரூராட்சிகளை சேர்ந்த 20 பள்ளிகளிலும் தொடங்கப்பட்டது. இதன் மூலம் 6 ஆயிரத்து 346 மாணவ, மாணவிகள் பயனடைந்து உள்ளனர்.

நிகழ்ச்சியில் ராசிபுரம் ஒன்றிய குழு தலைவர் கே.பி.ஜெகநாதன், மாவட்ட தி.மு.க. பொருளாளர் பாலச்சந்திரன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் அரங்கசாமி, முத்துக்காளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அருள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி, மாவட்ட கல்வி அதிகாரி பாலசுப்பிரமணியம், ராசிபுரம் தாசில்தார் சரவணன், ராசிபுரம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் தனம், மேகலா, அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு மற்றும் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்