தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்

Update: 2022-09-16 19:00 GMT

தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை நேற்று முன்தினம், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் 14 பள்ளிகளில் படிக்கும் 1,233 மாணவ-மாணவிகளுக்கும், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள 34 தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் 1,052 மாணவ-மாணவிகளுக்கும் காலை உணவு வழங்கப்படுகிறது.

இதன் தொடக்க விழா திண்டுக்கல் நாகல்நகர் சவுராஷ்டிரா மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதற்கு கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தனர். பின்னர் மாணவ-மாணவிகளுடன் அமைச்சர்கள் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டனர். மேலும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவை ஊட்டிவிட்டு மகிழ்ந்தனர்.

கொடைக்கானல்

இந்த நிகழ்ச்சியில் காந்திராஜன் எம்.எல்.ஏ., மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், பொறியாளர் நாராயணன், மண்டல தலைவர் பிலால்உசேன், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சசிக்குமார், தி.மு.க ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், நகர பொருளாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் வில்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கு தி.மு.க. மேல்மலை ஒன்றிய செயலாளர் ராஜதுரை தலைமை தாங்கினார்.

ஊராட்சி தலைவர் பாக்கியலட்சுமி கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி துணை தலைவர் வாசு மற்றும் உறுப்பினர்கள், ஆசிரிய-ஆசிரியைகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் துரைப்பாண்டி நன்றி கூறினார்.

பெரும்பாறை

கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான பண்ணைக்காடு, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, குப்பம்மாள்பட்டி, கே.சி.பட்டி, பெரியூர், பாச்சலூர் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் தொடக்க பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு கேசரி, ரவா கிச்சடி ஆகியவை காலை உணவாக நேற்று வழங்கப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சிக்கு கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுவேதாராணி தலைமை தாங்கி, மாணவ-மாணவிகளுக்கு காலை உணவை வழங்கினார். திட்ட இயக்குனர் சரவணன், வட்டார கல்வி அலுவலர் பழனிராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய்சந்திரிகா, பண்ணைக்காடு பேரூராட்சி தலைவர் முருகேஷ்வரி, செயல் அலுவலர் சகாய அந்தோணி யூஜின், பண்ணைக்காடு பேரூர் கழக செயலாளர் உதயகுமார், பண்ணைக்காடு ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் மற்றும் கவுன்சிலர்கள் பொதுமக்கள் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்