கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

ஜெயங்கொண்டம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-06-30 19:40 GMT

மகா சக்தி மாரியம்மன் கோவில்

அரியலூர் மாவட்டம் சூரியமணல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மகா சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு திருவிழா நடைபெற்றது. நேற்று காலை வழக்கம்போல் பூஜை செய்வதற்காக பூசாரி கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது கருவறை முன்பு வைக்கப்பட்டிருந்த 4½ அடி உயரமுள்ள உண்டியல் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இந்த சம்பவம் குறித்து கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கல்யாணராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது கோவில் கேட்டில் பூட்டப்பட்டிருந்த பூட்டை கடப்பாறையால் நெம்பி உடைத்து மர்ம ஆசாமிகள் உள்ளே புகுந்திருப்பது தெரிய வந்தது.

முந்திரி காட்டில் உண்டியல்

கோவிலில் இருந்த 4½ அடி உயரமுள்ள உண்டியலை பெயர்த்தெடுத்த மர்ம ஆசாமிகள் கோவிலில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செட்டிகுழிப்பள்ளம் கிராமத்திற்கு அருகே இளமங்களம் பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் உண்டியலை உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. மேலும் உண்டியலுக்கு அருகிலேயே மது அருந்திவிட்டு மதுப்பாட்டிலை போட்டு சென்றுள்ளனர். இதையடுத்து உண்டியலை கைப்பற்றிய போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அரியலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள், வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மகா சக்தி மாரியம்மன் கோவிலில் கடந்த 13-ந் தேதி திருவிழா தொடங்கி 27-ந் தேதி நிறைவடைந்த நிலையில் உண்டியலில் காணிக்கையாக ரூ.50 ஆயிரம் வரை கிடைத்திருக்கும் என கூறப்படுகிறது. இந்த கோவிலில் குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் தங்களது குழந்தைகளின் எடைகளுக்கு தகுந்தார் போல் காணிக்கை செலுத்துவது வழக்கம் என்று கூறப்படுகிறது. மேலும் உண்டியலில் கிடந்த பணம் கடந்த 4 ஆண்டுகளாக எடுக்காமல் சேமித்து வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனால் பல லட்சம் ரூபாய் கொள்ளை போயிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த திருட்டு சம்பவம் குறித்து அப்பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் கூறுகையில், கோவில் அருகே ஒருவர் மோட்டார் சைக்கிளை ஓட்ட மற்றொருவர் தோளில் உண்டியலை தூக்கி வைத்துக்கொண்டு சென்றதை பார்த்ததாக தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்