உண்டியலை உடைத்து பணம் திருட்டு
கோலப்பாறை முருகன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள கோலப்பாறையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாலையில் பூசாரி வழக்கம்போல் பூஜை முடிந்ததும் கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலையில் பூஜைக்காக கோவிலை திறக்க வந்த பூசாரி கோவில் கதவில் போடப்பட்ட பூட்டுகள் உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது யாரோ மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தை திருடிச்சென்றுள்ளது தெரியவந்தது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த திருக்கோவிலூர் போலீசார் உடைந்து கிடந்த உண்டியலை பார்த்துவிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.
மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.