கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
வடவள்ளியில் கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடப்பட்டது
கோவை வடவள்ளியில் கருப்பராயன் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் பாதுகாப்பு பணியில் இரவு நேர காவலாளி பணியில் இருந்தார். அவர், அதிகாலை 4.50 மணிக்கு கழிவறைக்கு சென்றார்.
அப்போது கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கோவிலின் மண்டபத்தின் முன்புறம் இருந்த உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றனர்.
திரும்பி வந்து பார்த்த போது உண்டியல் உடைந்து கிடந்ததை பார்த்து காவலாளி அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி அவர், கோவில் நிர்வாகிகள், இந்து சமய அறநிலையத்துறைக்கு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
இதை அறிந்த வடவள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளரும் உடைக்கப்பட்ட உண்டியலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில், மர்ம நபர்கள் 3 பேர் கோவிலுக்குள் புகுந்து கண்காணிப்பு கேமராவை உடைக்க முயற்சி செய்வதும், பின்னர் அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை திருடும் காட்சிகளும் பதிவாகி இருந்தது.
அதன் அடிப்படையில் மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.